ராஜஸ்தான் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2013ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ். 2018ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அசுரப் பலத்துடன் அம்மாநிலத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அதற்கு முக்கிய காரணம் தேர்தல் பிரச்சாரத்தின் மாநில காங்கிரசுக்கும் தலைமை தாங்கிய  சச்சின் பைலட் தான்.
 
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் சச்சின். அவரே முதலமைச்சராக வருவார் என்று கருதப்பட்ட நிலையில், மத்த தலைவரான அசோக் கெலாட்டிற்கு அந்த பதறி கைமாறியது. இதனால் விரக்தியடைந்த சச்சின் பைலட்டை துணை முதலமைச்சர் பதவி கொடுத்து சமாதானப்படுத்தியது மேலிடம்.

காங்கிரஸ் கட்சியின் மறைந்த முக்கியமான தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் பைலட்டின் மகன் தான் சச்சின் பைலட். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்த அவர், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார். 

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான, ஃபரூக் அப்துல்லாவின் மகளான சாரா அப்துல்லாவை, கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்தார். தன் தந்தை ராஜேஷ் பைலட்டைப் போலவே, விமானம் ஓட்டுவதில் ஆர்வம்  கொண்டிருந்தார். 

தந்தையின் மறைவுக்கு பின் அரசியலுக்குள் நுழைந்த சச்சின் , 2004ல் ராஜஸ்தானின் டவுசா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். அதன்பின் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆஜ்மீர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2வது முறையாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தகவல், தொலைத்தொடர்புத்துறை மற்றும் கார்ப்ரேட் விவகாரங்களுக்கான துறையின் அமைச்சர் பதவிகளையும் அலங்கரித்தவர். எனினும், 2014ம் ஆண்டு ஆட்சியை இழந்து காங்கிரசின் செல்வாக்கு குன்றியதால், 2018ல், ராஜஸ்தான் மாநில அரசியலுக்கு திரும்பி, மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக விளங்கினார். 

தொடக்கம் முதலே முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நீடித்து வந்த பொருந்தா கூட்டணி, சச்சின் வகித்து வந்த இரட்டை பதவியை கேள்வி கேட்டதால் பூதாகரமானது. கடந்த சில நாட்களாக நீடித்து வந்த குழப்பத்தின் காரணமாக, சச்சின் பைலட்டின் துணைமுதலமைச்சர் பதவியும், மாநில கட்சியின் தலைமை பதவியும்  பறிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பத்திற்கு நெருக்கமாகவும், ராகுலின் நெருங்கிய வட்டத்திற்குள் இருக்கும் மிக முக்கிய இளம் தலைவர்களில் ஒருவருமான, சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி பதவியை இழந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது. 

ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா என்ற இளம் தலைவரை இழந்த காங்கிரஸ் கட்சி, ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடிக்கக் காரணமான சச்சின் பைலட்டையும் இழக்க தயாராகிவிட்டதையே தற்போதைய சூழல் காட்டுகிறது