தமிழகத்தில் எடப்பாடி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் 2 பேர் டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் நூலிழையில் அதிமுக அரசு தப்பியது. ஆனால் எம்எல்ஏக்கள் சிலர் திமுக தரப்பில் தொடர்பில் இருப்பதால் எடப்பாடி அரசு நீடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி தாவ முன்வந்துள்ளதால் சட்டப்பேரவையை உடனடியாக கூட்டுமாறு ஸ்டாலினும் வலியுறுத்தி வருகிறார். 

இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். நடைபெறும் நிகழ்வுகளை உற்று கவனித்தால் எடப்பாடி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. இதனால்தான் முன் எப்போதும் இல்லாத பதற்றத்திலும் கவலையிலும் எடப்பாடி தென்படுகிறார். அதிருப்தியில் உள்ள பாஜக மேலிடத்தை சரி கட்டும் முயற்சியில் எடப்பாடி தீவிரம் காட்டி வருகிறார். 

இதன் காரணமாகவே அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எஸ்.பி. வேலுமணி அவசரமாக டெல்லி சென்று உள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தூதுவர்களாக டெல்லி சென்ற அவர்கள் மத்திய ரயில்வே துறை அமைச்சரும் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை சந்தித்து பேசியுள்ளனர். தமிழகத்தில் தற்போது எடப்பாடி அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும் டெல்லியுடன் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு குறித்தும் அப்போது விரிவாக பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

ஆனால் பியூஸ் கோயல் தரப்பிலிருந்து மகிழ்ச்சி அளிக்கும் படியான எந்த வாக்குறுதியும் தங்கமணி மற்றும் வேலுமணி இடம் கொடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டெல்லியில் முகாமிட்டுள்ள இரண்டு அமைச்சர்களும் அமித் ஷாவை சந்தித்து பேசுவதற்காக காத்திருக்கின்றனர். அதேபோல் நிதியமைச்சரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன் சந்திக்கவும் அவர்கள் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.