தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டிருக்கிறது. 7 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை முதன்முறையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. மழையால் ஏற்பட்ட பேரிடர், கொரோனா தொற்று போன்றவை காரணமாக செலவுகள் அதிகரித்த போதிலும், வருவாய் பற்றாகுறை குறைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டிருப்பதாக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், நிதித்துறை செயலாளர் முருகானந்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டிருக்கிறது. 7 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை முதன்முறையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. மழையால் ஏற்பட்ட பேரிடர், கொரோனா தொற்று போன்றவை காரணமாக செலவுகள் அதிகரித்த போதிலும், வருவாய் பற்றாகுறை குறைக்கப்பட்டிருக்கிறது.

இனி வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை இல்லாத ஆண்டாக கொண்டு வருவதுதான் தமிழக அரசின் இலக்கு ஆகும். ரூ. 43 ஆயிரம் கோடி மூலதனச் செலவுகள் செய்யப்படும். அனைத்து துறைகளுக்கும் எவ்வளவு நிதி தேவையோ அந்த அளவுக்கு போதுமான நிதி வழங்கப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டத்தின் மூலம் 6 லட்சம் பேர் பயன் அடைவார்கள். உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் சதவீதமும் இதன் மூலம் பல மடங்கு அதிகரிக்கும். ஏற்கனவே அரசு செயல்படுத்தி வரும் 4 திருமண உதவித் திட்டங்கள் மாற்றப்படாது. மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டம்தான் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரிகளில் 2 மற்றும் 3-ம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவிகள், அரசு பள்ளியில் படித்திருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
வேலைவாய்ப்பை அதிகரிக்கப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உற்பத்தி செய்த பொருட்களை 5 சதவீதம் தமிழக அரசு கொள்முதல் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முந்தைய ஆண்டுகளுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மத்திய அரசிடமிருந்து கிட்டத்தட்ட கிடைத்து விட்டது. இந்த ஆண்டுக்கான ஜிஎஸ்டி ரூ.13 ஆயிரம் கோடி இன்னும் வர வேண்டியுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூலமாக கடந்த ஆண்டு ரூ. 36 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்தது. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 7 - 8 சதவீதம் அதிகம்.” என்று முருகானந்தம் கூறினார்.

தமிழக பட்ஜெட்டில் தொடர்ந்து வருவாய் பற்றாக்குறை அதிகரித்து வந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு குறைத்துக் காட்டப்பட்டிருக்கிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு என்றால் 2015 - 2021 வரையிலான காலம். அதன்படி ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆட்சிக்கு பிறகு வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டிருக்கிறது.
