நான் சொன்னதை செஞ்சிட்டீங்க... முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி... ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு..!
கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா ரூ. 5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்படும் என்று அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளைக் காக்க பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். “ கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்தப்படும் என்றும் அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.
மேலும், “பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்க இடம் வழங்கப்படும். இக்குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரை கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை அரசே ஏற்கும், கொரோனா நோய்த் தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்; அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும்” என்று பல அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புகளுக்கு எல்லாம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “கொரோனா தொற்று காரணமாகப் பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 28.5.2021 அன்று அறிக்கை வாயிலாக முதல்வரைக் கேட்டுக் கொண்டிருந்தேன். எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை 29.5.2021 அன்று வெளியிட்ட தமிழக முதல்வருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.