உத்தரபிரதேச மாநிலம் கைரானா மற்றும் நூர்புர் தொகுதி இடத் தேர்தல்களில்  பாஜக தோற்றதற்கு தொண்டர்கள் சம்மர் லீவுக்கு குடும்பத்தோட ஊருக்கு போனதுதான் காரணம் என அம்மாநில  அமைச்சர் லட்சுமி நாராயண் சவுத்திரி சிரிக்காமல் விளக்கம் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கைரானா மக்களவை தொகுதி மற்றும் நூர்புர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. கைரானாவில் ராஷ்ட்ரிய லோக் தளமும், நூர்புரில் சமாஜ்வாதி கட்சியும் வெற்றி பெற்றன.

உண்மையிலேயே எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டதே பாஜகவின் தோல்விக்கு காரணம் என அனைவரும் கூறிக்கொண்டிருக்க, அம்மாநில பாஜக அமைச்சர்  லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி வித்தியாசமான காரணத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடையே அவர் பேசும்போது,  கோடை விடுமுறை என்பதால் பாஜக  தொண்டர்கள் அனைவரும் குழந்தைகளுடன் வெளியூருக்கு டூர் சென்றுவிட்டனர். அதனால்தான்  இடைத்தேர்தலில் பாஜக தோற்றுவிட்டது என கூறி செய்தியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.