தமிழ் தமிழ் கலாச்சாரம் என கூறிக்கொள்ளும் தமிழ் திரையுலகம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எதுவுமே செய்யாத நிலையில் தனி ஒரு நடிகராக நடிகர் சிம்பு களத்தில் குதித்து போராட்டத்தை அறிவித்து அதை நடத்தியும் காண்பித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை , இளைஞர்களை கவர்ந்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக நடை பெறாத நிலையில் மூன்றவது ஆண்டாக தடை நீடிக்கும் நிலையில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும்  என்ற கோரிக்கை வலுவாக வலுத்து வருகிறது.

 தமிழகத்தில் மக்கள் முக்கியமாக மதிப்பது அரசியல் , அந்த அரசியலுக்கு தங்களை தலைமை தாங்கி வழி நடத்துவார்கள் என சினிமாகாரர்களை நம்புகின்றனர். அந்த அளவுக்கு சினிமாக்காரர்களை தங்களை வழி நடத்த வந்தவர்களாக எண்ணி போற்றுகின்றனர்.

 ஆனால் சினிமாக்காரர்கள் காசு சம்பாதிக்க எதையாவது செய்வதும் , கலாச்சார சீரழிவு பற்றி கவலைப்படாததும் மக்களை , ரசிகர்களை ஏமாற்றி உணர்ச்சிகரமான நிலையில் வைத்திருக்கவே விரும்புகிறார்கள் .

 மக்களுடைய இயல்பான போராட்டத்தில் சாதாரணமாக இணைவதே இல்லை என்பது தான் கடந்த கால வரலாறு.

இவர்கள் படம் ஓட ரசிகன் வேண்டும் , கட்டிடம் கட்ட ரசிகன் நிதி தரணும் ஆனால் அவர்கள் பிரச்சனையில் சுத்தமாக ஒதுங்கி கொள்வது வாடிக்கையாக உள்ளது. சாதாரண மக்கள் பாதிக்கப்படுவது குறித்து கருத்து கூட சொல்லமாட்டோம் என மவுனம் காக்கும் மேதாவிகள் தேர்தல் நேரத்தில் எதாவது கட்சியில் ஆதாயம் பெற்று ஓட்டு கேட்டு வரும் காட்சியை பார்க்கிறோம்.

காவிரி பிரச்சனை  , பண மதிப்பிழப்பு பிரச்சனை போன்ற விவகாரங்களில் வாயே திறக்காத கலையுலகத்தினர் தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கும் , தமிழக விவசாயத்தின் ஆதாரமான காளைகளை அழிக்கும் முயற்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டுவரப்பட்டுள்ளது குறித்தும் கனத்த மவுனம் காக்கின்றனர்.

இதை எதிர்த்து லட்சக்கணக்கான இளைஞர்கள் மாணவர்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வர சில நடிகர்கள் தவிர்த்து ஒட்டு மொத்த கலையுலகமும் ஓரங்கட்டி நின்று வேடிக்கை பார்க்கின்ற நிலை தான் உள்ளது.

ஆதரித்து குரல் கொடுத்த கமல் ,சூர்யா போன்றோர் மத்தியில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி உரக்க குரல் கொடுத்து , அதற்கான போராட்டம் நடத்த வலுவான குரல் கொடுத்த சிம்பு இன்று இளைஞர்கள் மத்தியில் உயர்ந்து நிற்கிறார்.

துணிந்து போராட்ட அறிவிப்பு வெளியிட்ட சிம்புவுக்கு ஆதரவாக இணைய தளத்தில் லட்சக்கணக்கில் லைக்குகள் , ஷேர் கள் கமெண்டுகள் என தொடங்கி இன்று முழுதும் சிம்புவும் ஒரு கவனிக்கப்பட வேண்டிய நபராக இருந்தார்.

5 மணிக்கு சிம்புவின் அழைப்பை ஏற்று அவரது இல்லத்தின் முன்பும் , தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இளைஞர்கள் திரண்டு நின்று தங்கள் போராட்டத்தை நடத்தினர். இது சிம்புவுக்கு மிகப்பெரிய மரியாதையை ஐடி துறையில் பணியாற்றும் மற்றும் கிரமப்புர நகர் புற இளைஞர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் சிம்பு உச்சத்தை தொட்டுள்ளார். மூன்று ஆண்டுகள் படம் இல்லாமல் இருந்த என்னை படம் வெளியானவுடன் தூக்கி நிறுத்திய தமிழக மக்களுக்காக அவர்களில் ஒருவனாக நீதி கேட்கிறேன் என்று கூறிய சிம்புவின் வார்த்தைகள் தன்னை மிகவும் பாதித்தாக போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர்  நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இது சிம்புவுக்கு கிடைத்த வெற்றி . இதன் மூலம் பீப் சாங் பிரச்சனையில் தன் மேல் விழுந்த கரையை சிம்பு துடைத்து கொண்டார் என்றார் கல்லூரி மாணவர் ஒருவர்.

அதுசரி சினிமாவில் ஸ்டண்ட் அடிப்பது போலவே பேட்டிகளிலும் ஸ்டண்ட் அடித்த நடிகர் சங்க நாயகர்கள் எங்கே நாசர் மட்டும் தான் தென்படுகிறார் என்று கேட்டார் ஒரு இளைஞர்.

இளைஞர்கள் , மாணவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல அவர்கள் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள் ஆனால் அனைத்தையும் கவனிப்பார்கள் என்பதற்கு இந்த சம்பவங்கள் கேள்விகள் அனைத்தும் சாட்சி.