காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணைக்குப் பிறகு, சென்னையில்  செய்தியாளர்களைச்  சந்தித்தார் தொல்.திருமாவளவன்.

அப்போது பேசிய அவர், ‘’தமிழக மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  அந்த வழக்கை எதிர்கொண்டு முறியடிப்போம். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டோம்.  அந்த வழக்கையும் எதிர்கொள்வோம். 

என்.ஆர்.சி. விவகாரத்தில் மக்களை திசை திருப்பவே, பாதிப்பு எதுவும் இல்லை என்று அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் கூறியிருக்கிறார். நாடு முழுவதும் என்.ஆர்.சி அமல்படுத்தப்படும் என நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள நிலையில், அதுபோல திட்டம் ஏதுமில்லை என பிரதமர் மோடி கூறியிருப்பது மக்களை திசை திருப்பும் செயல். நாட்டின் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.