தமிழகத்தில் காலியாக இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 21 ம் தேதி தேர்தல் நடைபெற்று 24 ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. இதனால் இடைத்தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

திமுக விக்கிரவாண்டி தொகுதியிலும், காங்கிரஸ் நாங்குநேரி தொகுதியிலும் போட்டியிடுவதாக அக்கூட்டணி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக இரண்டு தொகுதிகளுக்கும் விருப்பமனுக்களை பெற்று வருகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. கமலின் மக்கள் நீதி மையம் மற்றும் தினகரனின் அமமுக, இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிகவின் நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து கூறிய விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், தேமுதிக தலைமை கூறினால் இடைத்தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவத்தில் நடிகர் விஜய் கூறியது அவரின் சொந்த கருத்து என்றார். அதிமுக பேனர் விழுந்ததால் தான் சர்ச்சை ஆனது என்றும் தனியார் பேனர் விழுந்திருந்தால் சர்ச்சை ஆகியிருக்காது என்று தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக விஜயகாந்தின் மகன் கூறியிருப்பது அதிமுக-தேமுதிக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.