ராசாவுடன் விவாதிக்க அலுவலகத்திற்கே வர தயார் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி கூறியுள்ளார். 
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் டிசம்பர் 1ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  2ஜி ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்த கட்சி திமுக. மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரனைப்போல பேசிவருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். விரைவில் 2ஜி வழக்கில் அவர் சிக்குவார் என விமர்சித்து பேசினார்.

2ஜி வழக்கில் சிக்கி சிறை சென்ற பின்னர் விடுதலையான திமுக துணை பொது செயலாளர் ஆ. ராசா முதலமைச்சரின் விமர்சனத்திற்கு பதில் அளித்தார். அப்போது,  2ஜி குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறேன், கோட்டையில் வைத்து நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் தயாரா? அட்டர்னி ஜெனரல் உட்பட யாரை வேண்டுமென்றாலும் உடன் வைத்துக் கொள்ளட்டும், நான் தயாராக இருக்கிறேன் என சவால் விடுத்தார். 

அதேபோல் ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன என்பதை விவாதிக்க தயாரா என்று கேள்வி எழுப்பிய ராசா, உங்க ஆத்தா ஊழல் செய்து ஜெயிலுக்கு போனவர், அரசியல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி அதை படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி. கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே சசிகலாவை சுதாகரனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து புதிய புதிய கம்பெனிகளை உருவாக்கி பல நூறு கோடி ரூபாய்களை கொள்ளையடித்தவர் ஜெயலலிதா. அரசியலில் ஜெயலலிதா இறந்தது அசிங்கம் என நான் சொல்லவில்லை, உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இதற்கு உங்கள்  பதில் என்ன என கடுமையாக விமர்சித்திருந்தார். அவரின் இந்த பேச்சு அதிமுக தொண்டர்களை ஆத்திரப்பட வைத்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கூறியதுபோல எந்த இடத்திலும் ஜெயலிதாவை உச்ச நீதிமன்றம் கொள்ளைக்காரி, சட்டத்தை மீறியவர், சட்டத்தை படுகொலை செய்தவர் என குறிப்பிடவில்லை என கூறிய அவர், ராசாவை கடுமையாக கண்டித்தார். 

தொடர்ந்து பேசிய அவர்,  திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தொடர்ந்து செல்வி ஜெயலலிதா அவர்களை  தரக்குறைவான வகையில் பேசியுள்ளார்.  ஜெயலலிதா வழக்கு குறித்து  ராசா தவறான தகவல்களை கூறி இருக்கிறார். ராஜா கூறுவது போல உச்சநீதிமன்ற தீர்ப்பில் எந்த இடத்தில் ஜெயலலிதாவை கொள்ளைக்காரி என குறிப்பிடப்பட்டிருக்கிறது என கேள்வி எழுப்பி அவர்,  உச்சநீதிமன்ற தீர்ப்பின் புத்தக நகலை காட்டி, இங்கு எந்த இடத்திலும் ஜெயலிதாவை ராசா கூறுவதுபோல குறிப்பிடப்படவில்லை என்றார். இதற்கு ராசா பதில் சொல்ல வேண்டும், இந்த வழக்கை நடத்தியவன் என்ற முறையில் இதற்கு நான் விளக்கம் அளிக்க முன்வந்துள்ளேன்.  இது தொடர்பாக விவாதிக்க நான் அண்ணா அறிவாலயத்திற்கும் வர தயார். இது தொடர்பாக ராசா மீது வழக்கு தொடுக்கவும் தயார். அறிவாலயத்திற்கு வரும்போது யாருடைய பாதுகாப்பும் இல்லாமல் நான் வருகிறேன். 

தான் இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்தவர் என்பதையும் மறந்து ஆ ராசா தொடர்ந்து தரம் தாழ்ந்த முறையில் பேசி வருகிறார். அவருடைய உடல்மொழி  சொடக்கு போட்டு பேசுகின்ற குணம் யாருடையது? மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி தவறாக, தரம் தாழ்ந்து நடந்து கொள்ள கூடாது. இதுதான் திமுக அவருக்கு கற்றுக்கொடுத்த பண்பாடா.? திமுக தலைவர் ஸ்டாலின் ஆ.ராசாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். ராசாவின் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் கூறினார்.