Ready for CBI inquiry! - Minister Vijayapaskar
குட்கா வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படுவது குறித்து பயமில்லை என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மடியில் கணமில்லை; அதனால் வழியில் பயமில்லை என்று செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
குட்கா ஊழல் வழக்கை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தாம் வரவேற்பதாக திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
குட்கா ஊழல் வழக்கு சுதந்திரமாக நடைபெற சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்றார். குட்கா வழக்கில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இது குறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, பொது வாழ்க்கையில் அவதூறுகள் குற்றச்சாட்டுகள் புனையப்படுவது வழக்கம் என்று கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நல்வாழ்வுத் துறையில் வெளிப்படையுடன் பணி நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு பணி நியமனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பணி நியமனம், நேர்மையாக நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. இரண்டு கையையும் இழந்த ஒருவருக்கு செயற்கை கை பொறுத்தப்ட்ட மருத்துவர் குழுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கினார்.
அப்போது விஜயபாஸ்கரிடம், செய்தியாளர்கள் குட்கா வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது குறித்து கேட்டதற்கு, பொது வாழ்க்கையில் அவதூறுகள் புனையப்படுவது வழக்கம். சிறப்பாக செயல்பட்டால், இதுபோன்று குற்றச்சாட்டுகள் எழுவது இயல்பு என்றார். மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை என்று கூறி குட்கா வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
