முதலமைச்சர் ஏன் வர வேண்டும்? விவாதத்திற்கு நான் தயார்? என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆ.ராசா சவாலுக்கு பதில் அளித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் டிசம்பர் 1ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் "2ஜி ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்த கட்சி திமுக. மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் 2ஜி வழக்கில் சிக்குவார்" என விமர்சித்துப் பேசினார்.

2ஜி வழக்கில் சிக்கி சிறை சென்று பின்னர் விடுதலையான திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா முதல்வரின் விமர்சனத்துக்கு பதில் அளித்தார். "2ஜி குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். கோட்டையில் வைத்து நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் தயாரா? அட்டார்னி ஜெனரல் உட்பட யாரை வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளட்டும். நான் தயாராக இருக்கிறேன் என சவால் விடுத்தார்.

இதன் பின்னர் அதிமுகவிலிருந்து பதில் வராத நிலையில் சேலத்தில் ஆ.ராசாவுக்கு ஆதரவாக ஸ்டாலின் பேசினார். நேருக்கு நேர் விவாதிக்க ஆ.ராசா விடுத்த சவாலை ஏற்க எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா?, ஊழல் பற்றி விவாதிக்க தயாரா என்று ஆ.ராசா கேட்டு 3 நாளாகியும் முதல்வர் பழனிசாமி வாய் திறக்கவில்லை. அப்படி தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால், ஆண்மை இருப்பது உண்மை, என்றால் ஆ.ராசாவிடம் தேதி குறியுங்கள்; வரத்தயார் என ஸ்டாலின் காட்டமாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆ.ராசாவிடன் விவகாதம் நடத்த நான் தயார் என கூறியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- 2ஜியில் ஊழல் செய்த பணத்தைப் பதுக்கி வைத்துள்ளார் ஆ.ராசா. அதனால்தான் ராசாவை கூடவே வைத்துள்ளார் ஸ்டாலின். ஆ.ராசா விவாதத்துக்கு அழைத்தால் எடப்பாடியார் எதற்கு வர வேண்டும்? நான் வருகிறேன். திமுக தயாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடியாரைப் பற்றி பேச ஆ.ராசாவுக்கு என்ன யோக்கியதை உள்ளது? ஜெயலலிதாவையோ, எடப்பாடியாரையோ பற்றி பேச ஸ்டாலினுக்கோ, ஆ.ராசவுக்கோ தகுதியில்லை. பொறாமையுடன் எப்படியாவது அவதூறு பரப்பி ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என கனவு காணும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.