தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ள நிலையில், ஈரோடு, தேனியில் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ள 3 சாவடிகளின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதில், தருமபுரி, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள 10 வாக்குச்சாவடிகளின் விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. தேனி, ஈரோடு மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள 3 வாக்குச்சாவடிகளின் விவரங்களும் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில், திருமங்கலம் பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 248-ல் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதி, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் கம்மவர் சரஸ்வதி நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 67-ல் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.தேனி நாடாளுமன்ற தொகுதி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி சங்கரநாராயணா நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 197-ல் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.