அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதற்காக, போதைப் பொருட்கள் மூலம் பா.ஜனதா மூத்த தலைவர் வாஜ்பாய் மயக்க நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டிய லாலு பிரசாத் யாதவுக்கு, மத்திய அமைச்சர் ராதாமோகன்சிங் பதில் அளித்து இருக்கிறார்.
லாலு குற்றச்சாட்டு
ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பா.ஜனதா மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயை அரசியலில் இருந்து ஓரம் கட்டுவதற்காக அவருக்கு போதைப் பொருள் கொடுக்கப்பட்டு மயக்க நிலையில் வைத்திருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.
ராதாமோகன்சிங் பதில்
இந்த நிலையில், மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன்சிங் நேற்று உ.பி. மாநிலம் பல்லியாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது லாலுவின் வாஜ்பாய் குறித்த குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு நேரடியாக பதில் அளிப்பதை தவிர்த்த அவர், ‘‘லாலு ஒரு எதிர்க்கட்சி தலைவர். பா.ஜனதா கூட்டணியை எல்லா விஷயங்களிலும் அவர் எதிர்த்து வருவதாக’’ குறிப்பிட்டார்.
யாரும் மதிப்பது இல்லை
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, ‘‘ அவர் (லாலு) சொல்வதை யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்வது இல்லை...ஏன், பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் கூட அவரை ஒரு பொருட்டாக மதிப்பது இல்லை’’ என்றார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவரான ராதாமோகன்சிங்கிடம், ‘‘நிதிஷ்குமார் பா.ஜனதாவிடம் நெருக்கம் காட்டி வருவது’’ குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், நிதிஷ் குமாரின் வருங்கால நடவடிக்கை பற்றி யூகமாகத்தான் எதையும் சொல்ல முடியும்’’ என்றார். மேற்கொண்டு அதைப்பற்றி விளக்கம் எதையும் கூறவில்லை.
இயற்கைக்கு மாறான கூட்டணி
‘‘இயற்கைக்கு மாறான சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணியால் பா.ஜனதாவுக்குத்தான் சாதகமாக அமையும்’’ என்றும், மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
பா.ஜனதா சாதி மற்றும் மதச்சாயம் பூசுவதில் பா.ஜனதாவுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிய ராதா மோகன்சிங், ‘‘கருப்புப் பணம் விவகாரத்தைப் பொருத்தவரை, மாயாவதியாக இருந்தாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவாக இருந்தாலும் சரி, அவர்கள் குற்றவாளி என்றால் தப்ப முடியாது’’ என்றார்.
