Ranjit Kumar resigns as Solicitor General of India
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கு தனது சொந்தப் பிரச்னைகளே காரணம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் இரண்டாவது மூத்த சட்ட அதிகாரியான அவர், தனது பதவி விலகல் கடிதத்தை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு வெள்ளிக்கிழமை இன்று அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் அரசு எனக்கு நல்லதையே செய்தது. ஆனால் என் சொந்த பிரச்னைகள் காரணமாக என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் ரஞ்சித் குமார்.
சொலிசிட்டர் ஜெனரலாக தனக்குள்ள கடமைகள் தனது அன்றாட வாழ்வியல் நெருக்கடியில் மேலும் சிக்கலை உண்டாக்கியுள்ளதாகக் கூறிய ரஞ்சித் குமார், தனது குடும்பத்தினரின் ஆரோக்கிய விஷயத்தில் செலுத்தும் கவனங்களால் தன்னால் பணியில் அதிகம் ஈடுபட இயலவில்லை என்று கூறியுள்ளார். ஆகவே தனது பணி விலகல் மூலம் குடும்பத்தினருடன் அதிகம் செலவழிக்க இயலும் என்று கருதுவதாகக் கூறியுள்ளார் ரஞ்சித் குமார்.
அரசு தன்னை கௌரவமாக நடத்தியது என்றும், தாம் மிகவும் மகிழ்ச்சியுடன் பணியில் ஈடுபட்டதாகவும், நல்ல அனுபவங்களைத் தாம் சுமந்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, மூத்த வழக்கறிஞரான ரஞ்சித் குமார் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் கடந்த 2014ஆம் ஆண்டு சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அப்போது அரசின் தலைமை ஆலோசகராக இருந்த முகுல் ரோத்தகி அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டார். முகுல் ரோத்தகி கடந்த ஜூன் மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பையும் அவர் ஏற்கவில்லை. அதனால், அவருகுப் பின்னர் கே.கே.வேணுகோபால் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகப் பொறுப்பேற்றார்.
முகுல் ரோத்தகி ராஜினாமா செய்த போது, அடுத்த நிலையில் ரஞ்சித் குமாரும் ராஜினாமா செய்வார் என்ற் எதிர்பார்கப்பட்டது.
