Rangaswamy meets BJP Leader amit shah

புதுச்சேரி வருகை தந்த பாஜக தலைவர் அமித்ஷாவை, என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சந்தித்து குடியரசு தலைவர் தேர்தலுக்கான ஆதரவை தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, புதுச்சேரியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை புதுவை விமான நிலையத்துக்கு வந்த அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கட்சியைப் பலப்படுத்தும் வகையிலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அமித்ஷா புதுவைக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை வந்த அவரை, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

இந்தநிலையில் புதுச்சேரி வந்துள்ள அமித்ஷாவை, என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, குடியரசு தலைவர் தேர்தலுக்கான ஆதரவை தெரிவித்தார்.

அப்போது, என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன், 5 எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர். ஆனால், மீதமுள்ள 3 எம்.எல்.ஏ.க்களும் இந்த சந்திப்பை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. 

எம்.எல்.ஏ.க்கள் பிரியங்கா, செல்வம், திருமுருகன் ஆகியோர் அதிருப்தியில் உள்ளதாகவும், இதனால் அமித்ஷா உடனான சந்திப்பை புறக்கணித்துள்ளதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் பிளவு உருவாகும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.