2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுவிட்டு, ஆட்சியையும் பிடித்துவிட்ட ரங்கசாமி, அடித்தாரே ஒரே பல்டி.

அதிரடி அரசியலுக்கு பெயர்போன செல்வி ஜெயலலிதாவே, கொஞ்சம் ஆடித்தான் போனார்.

அப்படி என்னதான் செய்துவிட்டார் ரங்கசாமி..?

யாருக்காகவும் இறங்கி போகாத செல்வி ஜெயலலிதா, ரங்கசாமியின் வெற்றிக்காகவும், என்ஆர் காங்கிரசுக்காகவும் புதுச்சேரியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பிரச்சாரம் செய்தார்.

அதிமுக 5, என்ஆர் காங்கிரஸ் 15,திமுக 2, காங்கிரஸ் 7, சுயேட்சை 1 என வெற்றி பெற்றனா. மொத்தம், 14 உறுப்பினர்கள் பெற்றால் மெஜாரிட்டி என்ற நிலையில், ஒரு சுயேட்சை உறுப்பினரை, விலைபேசி கொண்ட ரங்கசாமி, காரியம் ஆனவுடன், அதிமுகவின் காலை வாரிவிட்டு, ஜெயலலிதாவின் பொறுமையையும், கோபத்தையும் ரொம்பவே சோதித்துவிட்டார்.

அதனால்தான், 2014 நாடாளுமன்ற தேர்தலில், துரோகி என தேர்தல் பிரச்சாரத்தின் போது, ரங்கசாமியை கடுமையாக சாடினார் ஜெயலலிதா.

எதிரிகளையும் மன்னிக்கும் ஜெயலலிதா, துரோகிகளை எப்போதும் மன்னித்ததாக வரலாறு கிடையாது. ஆனால், ரங்கசாமி விஷயதில் மட்டும் அது பொய்யாகிபோனது. நாராயணசாமியின் மாநிலங்களவை எம்பி பதவி முடிந்தவுடன், காலியாக இருந்த பதவிக்கு போட்டி வந்தபோது, ரங்கசாமி முன்னிறுத்திய ராதாகிருஷ்ணனுக்கு அதிமுக ஆதரவளித்து, வெற்றி பெற செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

தற்போது, அதிமுகவுக்கு திடீரென ரங்கசாமி ஆதரவளிக்க பெரிய காரணம் ஒன்றும் இல்லை. ஒரே காரணம் தான். தனது அரசியல் பரம வைரியான நாரயாணசாமியை மண்ணை கவ்வ வைக்க வேண்டும் என்பதுதான்.

இதில் உள்குத்து என்றால், நாராயணசாமியால் முதலமைச்சர் பதவிக்கு தடுக்கப்பட்ட மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், ரங்கசாமியின் சொந்த அண்ணன் மருமகன் ஆவார்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல, அதிமுகவுக்கு செய்த துரோகத்தையும் மறந்துவிட்டு, நாராயணசாமி தோற்றால் போதும் என களத்தில் குதித்துள்ளார் ரங்கசாமி.

முதலியார் சமூகத்தை சேர்ந்த ஓம்சக்தி சேகருக்கும், கிராமணி சமுதாயத்தை சேர்ந்த நாராயணசாமிக்கும்தான் தற்போது கடும்போட்டி. அதாவது அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையேதான்.

நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதி வன்னியர்கள், தலித்துகள், முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள தொகுதியாகும். இதில், மூன்றில் ஒரு பங்கு வன்னியர் சமூதாயத்தினர் உள்ளதால், ரங்கசாமியின் பெரும்பான்மையான வாக்கு வங்கி இங்கு உள்ளதாலும், நாராயணசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதிமுகவுடன், ரங்கசாமி கைகோர்த்துள்ளதால், கலங்கித்தான் போயியுள்ளனர் காங்கிரஸ் கட்சியினர். எது எப்படி இருந்தாலும், நாராயணசாமி வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், காங்கிரஸ் மற்றும் திமுகவினர் நான்கு கால் பாய்ச்சலில் ஓட தொடங்கியுள்ளனர்.

அதிமுகவுக்கு நெல்லித்தோப்பில் ஜாக்பாட் அடித்துள்ளதே என்றே சொல்லலாம். புதுவையின் பிரதான கட்சியின், என்ஆர் காங்கிரசின் பலம், அதிமுகவின் சொந்த பலம், பாரதிய ஜனதாவின் ஆதரவு ஆகியவை ஓம்சக்தி சேகருக்கு மிகுந்த பலத்தை கொடுத்துள்ளது.

ஓம்சக்தி சேகரையும், காங்கிரஸ் கட்சியின் உள்குத்தையும் சமாளித்து நாராயணசாமி வெற்றி பெற ரொம்பவே, மெனக்கெட வேண்டியது அவசியம்.