மருது சகோதரர்கள் போலவும், ராமல், லட்சுமணன் போலவும் ஓபிஎஸ், இபிஎஸ் செயல்படுகின்றனர். அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என வளர்மதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 3,500 பேர் பங்கேற்க உள்ளனர்.  

அப்போது, அதிமுக இலக்கிய அணி செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான வளர்மதி பேசுகையில்;- 2021 சட்டமன்ற தேர்தல் என்பது ராமாயணப் போர். இந்த  ராமாயணப் போரில் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ராமர், லட்சுமணனை போல இந்த இயக்கத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தலைமை ஏற்று இந்த ஆட்சியை வழிநடத்துகின்றனர். ராவணன் கூட்டம் என்பது மு.க.ஸ்டாலினின் கூட்டம். புரட்சி தலைவர் எம்ஜிஆர் அப்போதே கருணாநிதியை தீய சக்தி என்று சொன்னார்.

அந்த தீய சக்தியை சார்ந்த ராவணன் கூட்டத்தை வேரோடு அழிக்க பிறந்திருப்பவர்கள் தான் ஓபிஎஸ், இபிஎஸ். இந்த சட்டமன்ற தேர்தலோடு திமுக கதை முடிவு பெற்றுவிடும். நம்மை பார்த்து ஊழல் ஆட்சி சொல்லி மு.க.ஸ்டாலின் குடும்பமே வீதி வீதியாய் அலைந்து கொண்டிருக்கிறது என வளர்மதி விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.