திமுகவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெடித்துள்ள கோஷ்டி மோதல் வெட்டுக்குத்து நடக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுப்பதால் கழக உடன்பிறப்புகள் கலங்கித் தவித்து வருகின்றனர்.  

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க.வின் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் சுப.தங்கவேலன். 35 ஆண்டுகளாக தி.மு.க.வின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இவரும், இவரது இரு மகன்களும் மட்டுமே இருந்து வந்தனர். ராமநாதபுரத்தில் இவர்களை மீறி கட்சியில் யாராலும் வளர முடியவில்லை. இந்த சூழ்நிலையில் தான் 2011 சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க தோற்றது. இதனை தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து சுப.தங்கவேலன் மாற்றப்பட்டாலும் அவரது மகன் சம்பத் மாவட்டச் செயலாளர் ஆனார். அவரும் கோஷ்டி அரசியல் செய்த காரணத்தினால் மீண்டும் சுப.தங்கவேலன் மாவட்டச் செயலாளர் ஆனார். 

ஆனால், அவர் மீது சில மோசடி வழக்குகள் பதியப்பட்டதால், மற்றொரு மகனான திவாகரனை மாவட்டச் செயலாளர் ஆக்கினார். திவாகரன் மாவட்டச் செயலாளர் ஆனதும் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனால் அவரை மாற்றிவிட்டு கமுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் மாவட்டச் செயலாளர் ஆனார். இவருக்கு சுப.தங்கவேலன் தரப்பு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை என்கிற புகார் உள்ளது.

 

இந்த நிலையில் 'முத்துராமலிங்கத்தை கொலை பண்ணிடுவோம்' என சமீபத்தில், சுப.தங்கவேலன் ஆதரவாளர் ஒருவர், 'வாட்ஸ் ஆப்பில் மிரட்டல் விடுக்க, அவரை, போலீசார் கைது செய்தனர். பதிலுக்கு, தங்கவேலன் தரப்பும், மாவட்ட பொறுப்பாளர் மேல், புகார் கொடுத்திருக்கிறார்கள்.

இதனால், இரு தரப்பினர் மீதும், போலீஸ், வழக்கு பதிவு செய்திருக்கிறது. இவர்களது கோஷ்டிப்பூசலை தீர்க்கவில்லை என்றால் பெரிய அளவில் வெட்டு, குத்து நடந்துவிடுமோ...' என கட்சிக்காரர் பயப்படுகிறார்கள். தற்போது தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வரும் மு.க.ஸ்டாலினுக்கு எங்கே தனது கட்சியில் நடக்கும் உள்ளூர் அரசியலை கவனிக்க நேரமிருக்கப்போகிறது..?