ramajeyam murder case transfer to cbi

திருச்சியில் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் தொழில் அதிபருமான கே.என்.ராமஜெயம். கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் எங்கு நடந்தது. யாரால் நடத்தப்பட்டது என்கிற விவரம் இதுவரை தெரியாத நிலை உள்ளது.

சாதாரண, பஞ்சாயத்து யூனியன் தலைவராக வந்து, லால்குடி தொகுதியில் எம்எல்ஏவாக பதவி வகித்து, பெரும்பான்மை சமுதாய மக்கள் மத்தியில் திமுகவின் மாவட்ட செயலாளராகி, இன்று திமுகவில் அசைக்க முடியாத ஒரு முக்கிய நபராக இருப்பவர் கே.என்.நேரு.

அப்படிப்பட்ட நேருவுக்கு முதுகெலும்பாக செயல்பட்டவர் ராமஜெயம். 2011ம் ஆண்டு திமுக சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது. கே.என்.நேருவும் தோற்றுப் போனார்.

இந்நிலையில் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் ராமஜெயம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அதிகாலை வாக்கிங் போனதாக கூறப்பட்ட ராமஜெயம், 10 மணி ஆகியும், வீட்டுக்கு வராததால், அவரின் மனைவி, தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து ராமஜெயம் சாயலில் ஒருவர் கல்லணை சாலையில், காவிரி கரையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசாரும் விரைந்துசென்று பார்த்த போது இறந்து கிடந்தவர் ராமஜெயம்தான் என்பதும் தெரிய வந்தது.

அவரின் கைகள் மற்றும் கால்கள் இரும்பு கம்பியால் கட்டப்பட்டு, வாயில் மிகப்பெரிய துணி அடைக்கப்பட்டு துடி, துடிக்க கொலை செய்யப்பட்டு இருந்தார்.

பெண் தொடர்புகள் காரணமா? அரசியல் காரணமா? சொத்து பிரச்னை காரணமா? ராமஜெயத்தின் அரசியல் வளர்ச்சி பிடிக்காமல் நம்மைவிட எங்கு வளர்ந்து விடுவானோ என்கிற எண்ணத்தில் நடந்த கொலையா? என பல கோணங்களில் இந்த வழக்கை போலீசார் விசாரித்து வந்தனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு மேலாகியும், போலீசார் இதுவரை கொலையாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை பற்றி 12 வது நிலை அறிக்கையை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்தது சிபிசிஐடி.

ராமஜெயம் கொலை தொடர்பாக 300-க்கு மேற்பட்ட முன்விரோத காரணங்கள் பற்றி சந்தேகம் உள்ளதாகவும், 300 சந்தேகக் கோணங்களையும் ஒவ்வொன்றாக விசாரித்து வருவதாகவும் ஐகோர்ட்டில் சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது.

5 ஆண்டுகளாக விசாரணை நடத்தியும் கொலையாளிகளை சிபிசிஐடி நெருங்கவில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என ராமஜெயம் மனைவி லதா உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 5 ஆண்டுகளாகியும் கொலையாளிகளை கண்டுபிடிக்கவில்லை என கூறிய நீதிபதி பஷீர் அகமது, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இது தொடர்பாக ஒரு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டார்.