நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்திறப்பு: ஒன்று கூடுவோம் சொந்தங்களே! என மறைந்த வன்னிய சங்க தலைவர் காடுவெட்டி குரு மறைவிற்கு பின் அவருக்காக காட்டப்பட்ட நினைவு மண்டப திறப்பு விழாவுக்கு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில்; அன்புள்ள பாட்டாளி சொந்தங்களே!

பாட்டாளிகளின் வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று செப்டம்பர் 17. இந்த நாள் பாட்டாளி மக்களுடன் பல வகைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறது. பாட்டாளி மக்களுக்கு இட ஒதுக்கீடு என்னும் உரிமையை பெற்றுத் தருவதற்கான வரலாற்றுப் போராட்டம் இந்நாளில் தான் தொடங்கப்பட்டது. சமூக நீதியை நிலைநிறுத்துவதற்கான தியாகப் போரில் இன்னுயிரை ஈந்து தியாகம் செய்த 21 ஈகியர்களின் நினைவை கடந்த 32 ஆண்டுகளாக நாம் போற்றி வரும் நாளும் இந்த நாள் தான். கடந்த 2 ஆண்டுகளாக இன்னொரு கடமையும் நமக்கு சேர்ந்திருக்கிறது. அது நமது நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குருவின் நினைவைப் போற்றி வீரவணக்கம் செலுத்துவது தான்.

மன்னனுக்கு அவனது மக்களைக் காக்க படைத்தளபதி எப்படி முக்கியமோ, அதேபோல் மக்களையும், தொண்டர்களையும் காப்பதில் அரசியல் தலைமைகளுக்கும், சமுதாயத் தலைமைகளுக்கும் தளபதிகள் முக்கியம். எனது 40 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் எத்தனையோ தளபதிகளை உருவாக்கியுள்ளேன். அவர்களில் மிகவும் முக்கியமானவன் மாவீரன் ஜெ.குரு. நமது இயக்கத்தின் தளபதி என்பதை விட எனது குடும்பத்தில் ஒருவனாக, பெற்றெடுக்காத பிள்ளையாகத் தான் அவனை நான் நடத்தினேன். மாவீரன் குருவை பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் மனதிற்குள் பல பத்தாண்டுகளின் நினைவுகள் வலம் வருகின்றன. அவை அனைத்தும் பெருமைக்குரிய, பெருமிதப்படுவதற்குரிய நினைவுகள் தான் என்றாலும், அவற்றில் என்னுடன் தோள் நின்றவன் இல்லையே என்பதை நினைக்கும் போது தான் மனதிற்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டிய நினைவுகள், அதற்கு மாறாக வலியை ஏற்படுத்துகின்றன.

25 ஆண்டுகளுக்கு முன் 1995-ஆம் ஆண்டில் தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான ஜெயங்கொண்டம் பொன்னேரியை தூர்வார வேண்டும் என்று நான் கூறியவுடன் அதற்காக இளைஞர் படையை திரட்டி வந்தான். நான் கூடையில் மண்ணை நிரப்பி, அவன் தலையில் ஏற்றிய போது பஞ்சை சுமப்பது போன்று எளிதாகவும், என் தலைவன் என் மீது சுமத்திய பொறுப்பை சுமந்து செல்கிறேன் என்ற பெருமிதத்துடன் சுமந்து சென்றான். அதேபோல், அரியலூர் மாவட்டத்தில் இரட்டைக்குவளை முறையை ஒழித்ததில் தொடங்கி என்னை அழைத்துச் சென்று ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை திறக்க வைத்தது, அப்பகுதி மக்களுக்கு எந்த சிக்கல் ஏற்பட்டாலும் உடனடியாக களமிறங்கி போராடுவது என நான் இட்ட கட்டளைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்றிய உண்மை ஊழியன் அவன்.

எனக்கும், மாவீரன் குருவுக்கும் இடையிலான உறவுக்கு வயது 35 ஆண்டுகளுக்கும் அதிகமாகும். எனக்கு அறிமுகமான நாளில் இருந்து கடைசி மூச்சு விடும் நாள் வரை எனது நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவன் மாவீரன் குரு. அதேபோல் மாவீரன் குரு மீது நான் கொண்டிருந்த அன்பும், அக்கறையும் ஒருநாளும் குறைந்ததில்லை. மாவீரன் குருவுக்கும், எனக்கும் இடையிலான உறவு அரசியல் கட்சி நிறுவனருக்கும், தொண்டருக்கும் இடையிலானதாக ஒருபோதும் இருந்ததில்லை; மாறாக பாசமுள்ள தந்தைக்கும், விசுவாசமுள்ள மகனுக்கும் இடையிலான உன்னதமான உறவாகவே இருந்தது.

மாவீரன் மறைந்து 15 மாதங்கள் கடந்து விட்ட போதிலும் எனது மனம் மட்டும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகள் நடக்கும் போதெல்லாம் இடமும், வலமும் திரும்பிப் பார்த்து, அவன் இல்லாததை உணர்ந்து ஏமாந்து போகிறேன். ஆயிரம் பேர் பல்லாயிரம் விதமாக ஆறுதல் சொன்னாலும் கூட அவன் எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை.

பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூவை வைத்து ஈடு செய்வதைப் போன்று மாவீரன் குரு இல்லாத இந்த உலகில் அவனது நினைவுகளை ஏற்படுத்தி, அதில் ஆறுதல் தேடிக் கொள்கிறேன். மாவீரனின் மறைவுக்கு பிறகு நடந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் அறிவித்தவாறு, வன்னியர் கல்வி அறக்கட்டளை சட்டக்கல்லூரி வளாகத்திற்கு மாவீரன் ஜெ.குரு பெயர் சூட்டப்பட்டதுடன், அவனது திருவுருவச் சிலையும் கடந்த 16.09.2018 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதன்பின் சரியான ஓராண்டு கழித்து, தியாகிகள் வீரவணக்க நாளான செப்டம்பர் 17-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு காடுவெட்டி கிராமத்தில் அமைக்கப்படுள்ள குருவின் நினைவு மணி மண்டபத்தை நான் திறந்து வைக்கவுள்ளேன். பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் முன்னிலையேற்கிறார்.

வன்னியர் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் முனைவர். ச.சிவப்பிரகாசம், இரா.கோவிந்தசாமி, மருத்துவர் பி.சுந்தரராஜன், வன்னியர் சங்கத்தின் முதன்மை செயலாளர் பு.தா. அருள்மொழி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். காடுவெட்டி கிராமத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை நிலத்தில், கடந்த 13.12.2018 வியாழக்கிழமை நான் அடிக்கல் நாட்டிய மாவீரனின் மணிமண்டபத்தை 9 மாதங்களில் சிறப்பாக கட்டியெழுப்புவதற்காக கடுமையாக உழைத்த பா.ம.க.வின் மாநில துணைப் பொதுச்செயலாளரும், வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளருமான க. வைத்தியும், இந்தப் பணியில் அவருக்கு துணை நின்ற மாவட்ட செயலாளர்கள் கே.பி.என்.ரவி, க.செந்தில்குமார் ஆகியோரும் நினைவு மணிமண்டப திறப்புக்கான ஏற்பாடுகளையும் இரவு பகல் பாராமல் மேற்கொண்டு வருகின்றனர்.

மாவீரனை இழந்து வாடும் எனது உணர்வுகளையும், அவனது நினைவாக மணிமண்டபம் அமைத்து திறப்பதன் மூலம் நான் தேடும் ஆறுதலையும் பாட்டாளிகளாகிய நீங்கள் அனைவரும் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அந்த உணர்வுடன் மாவீரன் குருவின் மணிமண்டபத் திறப்பு விழாவிற்கு பாட்டாளி சொந்தங்களும், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருமளவில் திரண்டு வர வேண்டும்; யாருக்கும், எந்த இடையூறுமின்றி, இராணுவக் கட்டுப்பாட்டுடன் வந்து, நிகழ்வில் பங்கேற்று திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.