கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் பணிகளை அரசு துவக்காவிட்டால் பாமகவே தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபடும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவிரியிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது திறந்து விடப்படும் தண்ணீரை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். 

அதற்காக கொள்ளிடத்தின் துவக்கம் முதல் இறுதி வரை 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை என்ற முறையில் குறைந்தபட்சம் 20 தடுப்பணைகளை கட்ட வேண்டும் என பாமக வலியுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். 

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை சுமார் 500 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக வீணாக கடலில் கலப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் கடலூர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொள்ளிடத்தில் தடுப்பணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறியதாகவும் அறிவிப்பு வெளியிட்டு பல மாதங்கள் ஆகியும் எந்த பணியும் அரசு சார்பில் துவக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இதனால் விரக்தியடைந்த விவசாயிகள், முகத்துவாரத்திலிருந்து  20 கி.மீ உள்ளே காட்டுமன்னார் கோவிலை அடுத்த ஒற்றர்பாளையம் என்ற  இடத்தில் தற்காலிக தடுப்பணை கட்டும் பணியை தொடங்கியுள்ளதாகவும் விவசாயிகளின் இம்முயற்சிக்கு தமது ஆதரவு உண்டு எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் தடுப்பனை கட்டுவதில் அரசு மெத்தனமாக கிடப்பில் போட்டால், கொள்ளிட முகத்துவாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியே தடுப்பணை கட்டும் பணியில் இறங்கும் என ராமதாஸ் எச்சரித்துள்ளார்.