ரஜினி கட்சி ஆரம்பித்தபிறகு கூட்டணி குறித்து யோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். அரசியலில் நிரந்தர நண்பனும், எதிரியும் கிடையாது என்பதற்கு சமீபத்திய உதராணம் ரஜியும், ராமதாஸும் இணக்கமாக போக இருப்பது தான். அவர்களது பகை இன்று நேற்றல்ல. 18 ஆண்டுகால தொடர்ச்சி.  

ஒரு ஃப்ளாஷ்பேக் போய் வரலாமா..? 2002ஆம் ஆண்டு ரஜினியின் பாபா திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம்.  ராஜ்யமா? இமயமா? என ரஜினி முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் இருந்ததால் அந்தப்படத்தில் விடை கிடைக்கும் என ரசிகர்களும் ஆவலில் இருந்தனர். சில அரசியல் வசனங்கள் சிலரை குத்திக் காட்டின. 

ஆனால், அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ரஜினி சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளை எதிர்த்தது பாமக. இந்தப்பகையை ஆரம்பித்து வைத்ததே ரஜினி தான் என அப்போது பேசப்பட்டது. காரணம், முன்னர் கர்நாடகாவில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ரஜினி, வீரப்பனை கொலை செய்ய வேண்டும் என்று கன்னடத்தில் பேசினார். இதுதான் ராமதாஸையும், பாமகவையும் முதலில் சீண்டியது. வன்னிய வீரர் ஒருவரை ரஜினி கொலை செய்ய சொல்கிறார் என்று ராமதாஸ் வெளிப்படையாக கூட்டங்களில் பேசினார். 

இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் நடந்த வன்னியர் மாநாட்டில் பேசிய ராமதாஸ், ரஜினியின் பாபா படத்தை வன்னியர்கள் யாரும் பார்க்கக் கூடாது என கட்டளை போட்டார். அந்தச் சூழலில் வெளியான பாபா திரையிடப்பட்ட தியேட்டர்கள் மீது பாமகவினர் தாக்குதல் நடத்தினர். படப்பெட்டியைத் தூக்கிச் சென்ற காட்சிகளும் அரங்கேறின. இதையடுத்து, ராமதாஸைச் சட்டரீதியாக சந்திப்பேன் என அறிக்கை விட்டார் ரஜினி.

அந்தப் பிரச்சினை ஓய்ந்திருந்த நேரத்தில், காவிரியில் தண்ணீர் விடாத கர்நாடகாவைக் கண்டித்து நெய்வேலியில் பேரணி நடத்தி, அனல் மின்நிலையத்தை முற்றுகையிடுவோம் என 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இயக்குநர் பாரதிராஜா அறிவித்தார். சினிமா நட்சத்திரங்களை எதிர்த்த ராமதாஸ் இதற்கு ஆதரவு தெரிவித்தார்.

எனினும், “இது தேவையில்லாத போராட்டம். நெய்வேலி போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”எனக் கருத்து தெரிவித்தார். பாமகவின் செல்வாக்கு மிக்க தொகுதியான நெய்வேலியில் தனக்கு எதிர்ப்பு எழக்கூடும் என ரஜினி கருதியதே அதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளாத ரஜினி, அடுத்த நாள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

இந்த பிரச்சினைகள் ஒருவழியாக முடிவடைந்தபோது, திருவண்ணாமலையில் பேசிய ராமதாஸ், “சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி”என உருவகப்படுத்தி ரஜினியைத் தரக்குறைவாக விமர்சித்தார். பாபா பிரச்சினை, நெய்வேலி போராட்டம், திருவண்ணாமலை பேச்சு என ராமதாஸ் மீதிருந்த கோபத்தை 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி வெளிப்படுத்தினார். திமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமக போட்டியிட்ட 6 தொகுதிகளில் ஜனநாயக முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார் ரஜினி. இதனால், பாமகவுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் முட்டிக்கொண்டது.

அந்தச் சமயத்தில் மதுரை வந்த ராமதாசுக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டினர். அவர்கள் மீது பாமகவினர் தாக்குதல் நடத்தியதால், ராமதாஸ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுவரை ராமதாஸை நேரடியாக விமர்சிக்காத ரஜினி, நீண்டதொரு அறிக்கையை நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில் வாசித்தார். அதில், “ராமதாஸ் வன்முறையின் ராஜாவாகத் திகழ்கிறார். இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பதால்தான் நல்லவர்களும் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர்” என கூறப்பட்டு இருந்தது. என்னுடைய நண்பர்களின் வீட்டில் தஞ்சமடைந்துவிட்டீர்கள் என திமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தது தொடர்பாகவும் ரஜினி குறிப்பிட்டுப் பேசினார்.

அத்தோடி ஓய்ந்து போனது பாமக- ரஜினி மோதல். இப்போது பாமக- ரஜியுடன் கூட்டனி சேரும் அளவிற்கு பகைமை தோழமையாக மாறி இருக்கிறது. அதாவது பாபா முத்திரையில் மாம்பழம் கனிய காத்திருக்கிறது.