எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டு  இருப்பது தானே குற்றம்? உறக்கம் கலையுமா..? தமிழ் ஒளிருமா? என தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் மறைமுகமாக சாடியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை? தணிப்பரிதாம் துன்பமிது. தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ் தான் இல்லை!!’’என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 60 ஆண்டுகளுக்கு முன்பே ஏங்கினார். அவரது ஏக்கம் அவர்வழி வந்தவர்களால் கூட போக்கப்படவில்லை!

கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் எழுத வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் நடைமுறைக்கு வராதது யார் குற்றம்? அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய துறைகள், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டு  இருப்பது தானே குற்றம்? உறக்கம் கலையுமா..? தமிழ் ஒளிருமா?

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், அனைத்து சாலைகளிலும் மிதிவண்டிக்கு  தனி பாதை அமைக்கப்பட வேண்டும். நடைபாதைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட காலக்கெடு வழங்கி, அதற்குள்ளாக அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்'' என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.