குருவின் மனைவியை விரட்டியடித்துவிட்டு, அவர்களின் சொத்துக்களை பறித்துக்கொள்ள மறைந்த மாவீரன் குருவின் சின்ன தங்கச்சி குடும்பத்தினர் சதி செய்வதாக மூத்த சகோதரி செல்வியின் கணவர் கருணாகரன் பாமக நிறுவனர் ராமதாஸிடம் கண்ணீருடன் கூறியதாக ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

நேற்று தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை மாவீரன் குருவின் பெரிய தங்கையின் கணவர், அவரது குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகள் குறித்து நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டதாக ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

மாவீரன் குருவின் பெருமைக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவரது மற்றொரு  சகோதரியின் கணவர் அன்பழகனும், அவரது குடும்பத்தினரும் மற்றவர்களும் செயல்படுவதை எண்ணி தாம் மிகுந்த வருத்தமடைவதாகவும், இதுபோன்று நடக்கும் என்று தாம் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை என்றும் பொறியாளர் கருணாகரன் மிகவும் மனம் நொந்து என்னிடம் கூறினார். 

மாவீரன் குருவின் மகள் விருதாம்பிகையின் திருமணம் குறித்து அந்தக் குடும்பத்தின் முக்கிய நபர்களான குருவின் மனைவிக்கும், தமக்கும் தெரியாது என்றும் வேதனையுடன் அவர் கூறினார். குருவின் மனைவியை விரட்டியடித்துவிட்டு, அவர்களின் சொத்துக்களை பறித்துக்கொள்ள அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் பொறியாளர் கருணாகரன் கூறியுள்ளதால் வன்னியர்கள் மற்றும் பாமகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.