ramadoss statement about vijayabaskar district

சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் போதைப் பாக்குகள் அதிகம் விற்கபடுவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் நாட்டில் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மனிதர்களின் உயிரைப் பறிக்கும் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் மட்டும் தமிழகம் முழுவதும் தடையின்றி கிடைக்கிறது.

மதுவுக்கு சற்றும் சளைக்காத வகையில் போதைப் பாக்குகள் விற்பனையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனை சார்பில் ”தமிழ் நாடு புகையிலைப் பயன்பாட்டு ஆய்வு 2015-16″என்ற தலைப்பிலான ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

அதில், தமிழ் நாட்டில் 15 வயதைக் கடந்தவர்களில் 28.64 லட்சம் பேர் ஏதோ ஒரு வகையில் புகையிலையை பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பாக்குகள் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த போது போதைப் பாக்குகளை தடை செய்யும் வகையில் உணவுப் பொருட்கள் தரச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

அதனடிப்படையில் தமிழ்நாட்டில் போதைப் பாக்குகளை தடை செய்ய வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொடர்ந்து பலமுறை வலியுறுத்திய பிறகே 2013 ஆம் ஆண்டு மே மாதம் இந்த தடை விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் மெல்லும் புகையிலையை உற்பத்தி செய்யும் நான்கு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. போதைப்பாக்கு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக சென்னை மாநகர காவல் ஆணையர்கள் முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் லஞ்சம் தரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் அவர் மூலமாக ஆட்சி மேலிடத்திற்கும் கோடிக்கணக்கில் பணம் தரப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.

போதைப் பாக்குகள் மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மாவட்டம் என்ற அவப்பெயர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது. அந்த மாவட்டத்தில் போதைப்பாக்கு பயன்பாடு 19.9% என்ற அளவில் உள்ளது. இதற்குக் காரணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 போதைப்பாக்கு ஆலைகள் செயல்பட்டு வருவதும்,அம்மாவட்டத்தில் போதைப் பாக்குகள் மிகவும் தாராளமாக கிடைப்பதும் தான்.

இதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் போதைப் பாக்குகளை ஒழிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இந்த அவல நிலை நிலவுவது தான்.

போதைப்பாக்கு மட்டுமின்றி, கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருட்களும் தமிழகத்தில் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன.

இதைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் போதைப் பாக்குகளுக்கு விதிக்கப்பட்ட தடையை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

போதைப் பொருட்கள் மற்றும் பாக்குகள் விற்பனையை தடுப்பதற்காக நேர்மையான அதிகாரி ஒருவர் தலைமையில் தனிப்பிரிவு அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.