Asianet News TamilAsianet News Tamil

"ஊழல் செய்த ராம்மோகனை உடனே நீக்கு" - ராமதாஸ் கொக்கரிப்பு

ramadoss statement-about-ram-mohan
Author
First Published Dec 21, 2016, 3:18 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


தலைமை செயலாளர் ராம் மோகன் ராவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இராமமோகன்ராவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 10 இடங்களிலும், ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் சில இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தனிச் செயலாளர் ரமேஷ் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இராமமோகன்ராவின் உறவினர் வீட்டில் 40 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல வீடுகளில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அனைத்து சோதனைகளும் முடிவடைந்த பின்னர் இதுகுறித்த முழு விவரமும் தெரியவரும். இந்த சோதனைக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தமிழக ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து பலநூறு கோடி பணமும், தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இராமமோகன் ராவ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதோ, தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோ எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. என்றாவது ஒருநாள் இப்படியெல்லாம் நடக்கும் என்பது அனைவரும் எதிர்பார்த்தது தான். ஆனால், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பணியில் உள்ள தலைமைச் செயலர் வீட்டில் முதன்முறையாக சோதனை நடத்தப்படுவதும், இத்தகைய ஊழல்வாதி தான் கடந்த 6 மாதங்களாக ஊழலை ஒழிப்பதற்கான தமிழக அரசின் கண்காணிப்பு ஆணையராக பணியாற்றி வந்தார் என்பதும் தான் தமிழகத்தின் குடிமகன் என்ற முறையில் வேதனை அளிக்கிறது. இந்த சோதனைகளால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெரும் தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது.

ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், அண்ணா என நேர்மைக்கு புகழ்பெற்ற முதல்வர்களும், திரவியம், இ.பி.ராயப்பா, கார்த்திகேயன், ராஜேந்திரன் போன்ற தலைமைச் செயலர்களும், நெ.து. சுந்தரவடிவேலு, ஆற்காடு லட்சுமணசாமி முதலியார் உள்ளிட்ட துணைவேந்தர்களும் இருந்த தமிழகம் ஒரு காலத்தில் நேர்மைக்கும், நிர்வாகத்திறனுக்கும் அடையாளமாக திகழ்ந்தது. ஆனால், இன்று பதவியிலிருக்கும் போதே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்ற முதலமைச்சர்,  பணியிலிருக்கும் போதே வருமானவரி சோதனைக்கு உள்ளாகும் தலைமைச் செயலாளர், சசிகலாவை அரசியலுக்கு வரும்படி கெஞ்சும் துணை வேந்தர்கள் என தமிழகம் தரமிழந்து கொண்டிருக்கிறது.  

தமிழக அரசின் தலைமைச்செயலாளராக இராமமோகன்ராவ் நியமிக்கப்பட்டதைக் கண்டித்து கடந்த 09.06.2016 அன்று  நான் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தலைமைச்செயலாளர் பதவிக்கு அவர் தகுதி இல்லாதவர். மூத்த அதிகாரிகளுக்கு இல்லாத சில சிறப்புத் தகுதிகள் இராம மோகன் ராவுக்கு உள்ளன. ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு உதவியாக இருப்பார், அதிகாரத் தரகராக இருப்பார், அமைச்சர்கள் எந்தெந்த பணிகளுக்காக யாரிடம் பேரம் பேசுகின்றனர் & அதற்காக எவ்வளவு தொகை கைமாறுகிறது என்பன உள்ளிட்ட விவரங்களை சேகரித்து முதலமைச்சரிடம் தெரிவிப்பது ஆகியவை தான் அவருக்கு உள்ள தகுதிகளாகும். கடந்த 5 ஆண்டுகள் முதலமைச்சரின் செயலாளராக பணியாற்றிய போது தமது திறமைகளை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியதற்கான பரிசு தான் இப்பதவி’’ என்று குற்றஞ்சாற்றியிருந்தேன். அக்குற்றச்சாற்றுகள் உண்மை என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்போதே எனது அறிவுரையை தமிழக அரசு கேட்டிருந்தால் இன்று இந்த தலைகுனிவு ஏற்பட்டிருக்காது.

இராமமோகன்ராவை ஒரு மாநிலத்தின் தலைமைச்செயலாளராகவோ, தனி மனிதராகவோ மட்டும் பார்க்க முடியாது. தமிழகத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து ஊழலுக்கும் மையப்புள்ளியாக இருந்தவர் இவர் தான் என்றும், அதிக மதிப்பிலான பேரங்கள் இவர் மூலமாகத் தான் முடிக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது. இடைத்தரகராக செயல்பட்ட இராமமோகன்ராவ் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படும் போது, அந்த  ஊழல்களை செய்த ஆட்சியாளர்கள் மீதும், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இப்பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்கக் கூடாது.

எனவே, வருமானவரி சோதனையும், நடவடிக்கையும் தலைமைச் செயலாளருடன் நின்று விடாமல்  அவருக்கு மேல் அதிகார நிலையில் இருப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமும் நடத்தப்ப்பட வேண்டும். மேலும் ஊழல் புகாருக்கு உள்ளான இராமமோகன்ராவை உடனடியாக பதவி நீக்கம் செய்வதுடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios