Asianet News TamilAsianet News Tamil

தலா 5000 ரூபாய் வழங்குக.. இந்த விஷயம் ரொம்ப கவலையாக இருக்கு.. திடீர் அறிக்கை விட்ட ராமதாஸ்..

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடமிருந்து நிவாரண நிதியைப் பெறுவதில் அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

Ramadoss statement about rain damage
Author
Tamil Nadu, First Published Dec 27, 2021, 5:43 PM IST

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்குத் தேவையான நிதி இன்னும் வழங்கப்படவில்லை. தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரணம் வழங்குவதில் காட்டப்படும் தாமதம் ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் மழை பெய்துள்ளது. சென்னை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாத மத்தியில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், மத்திய அரசுத் தரப்பிலிருந்து இடைக்கால நிதியுதவி எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக, மத்தியக் குழு தமிழ்நாட்டில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்த பிறகு தான் எந்த விதமான நிதியுதவியும் வழங்க முடியும் என்று மத்திய அரசுத் தரப்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டது.

Ramadoss statement about rain damage

அதன்படி, மத்திய அரசால் அமைக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான குழுவினர் தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ததுடன் கடந்த நவம்பர் 24-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். அப்போது தமிழகத்திற்கு மழை மற்றும் வெள்ள நிவாரணமாக ரூ.4,626 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் ஒரு மாதத்திற்கு மேலாகியும் மத்திய அரசிடமிருந்து வெள்ள நிவாரண நிதி தொடர்பாக சாதகமான பதில் எதுவும் வரவில்லை.

Ramadoss statement about rain damage

அதைவிட கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த மத்தியக் குழு அதன் அறிக்கையைக் கூட மத்திய அரசிடம் தாக்கல் செய்ததாக இன்னும் தகவல் இல்லை. தமிழகம் மற்றும் புதுவையில் ஆய்வு செய்த குழுவினர் நினைத்தால் ஒரு வாரத்தில் அறிக்கையை நிறைவு செய்து தாக்கல் செய்திருக்க முடியும். இயற்கை பேரிடர் தொடர்பான நிகழ்வுகளில், நிதியுதவி வழங்குவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்குக் கூட இவ்வளவு தாமதிப்பது நியாயமல்ல. இத்தகைய அறிக்கைகளை தாக்கல் செய்ய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.

Ramadoss statement about rain damage

மத்திய அரசிடமிருந்து மழை மற்றும் வெள்ள நிவாரண நிதியைப் பெறுவதில் தமிழக அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தலைமையில் உயர்நிலைக் குழுவை டெல்லிக்கு அனுப்பி தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதியை விரைவாகப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிதியைக் கொண்டு சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios