கருப்புப்பணத்தை ஒழிக்கிறேன் என்று தேவையான முன்னேற்பாடு செய்யாமல் நடவடிக்கை எடுத்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 500 ரூபாய் நோட்டுகளே இன்னும் புழக்கத்திற்கு வராமல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் . இதனால் பொருளாதார சிக்கலே ஏற்படும் என ராமதாஸ் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் தவிர மீதமுள்ள அனைவரும் பணத்தை அன்றாடப் பயன்பாடுகளுக்காகத் தான் வைத்திருப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது, அவர்கள் வங்கிகளில் செலுத்தும் பணத்திற்கு இணையான திருப்பித் தருவதற்குரிய ஏற்பாடுகளை மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் செய்திருக்க வேண்டும்.

அதைக்கூட செய்யாமல் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளை அவசர அவசரமாகத் தொடங்கியது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். இப்போது கூட கடந்த 10-ஆம் தேதி தொடங்கி நேற்று வரை மொத்தம் 5 லட்சம் கோடி ரூபாய் பணம் இந்திய வங்கிகளில் செலுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அவ்வாறு செலுத்தியவர்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவான தொகை மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. இது சிறிதும் போதுமானது அல்ல.
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கான திட்டமிடல்கள் 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. 1000, 500 ரூபாய் தாள்களை திரும்பப் பெறுவதற்கு தேவையான புதிய ரூபாய் தாள்களை அச்சிடுவதற்கு இந்த 6 மாத கால அவகாசம் போதுமானதாகும். ஆனால், இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி போதிய அளவில் ரூபாய் தாள்கள் அச்சிடப்படவில்லை.

ரூ.2000, ரூ.500 ஆகிய இரு மதிப்புகளையும் சேர்த்து மொத்தம் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு மட்டுமே புதிய தாள்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன. இது நாட்டின் தேவையில் பாதி மட்டுமே. எனினும், இந்த தாள்கள் முழுமையாக புழக்கத்தில் விடப்பட்டிருந்தால் கூட நிலைமையை சமாளித்திருக்க முடியும்.
ஆனால், அதையும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் செய்யவில்லை. உதாரணமாக, கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தொடங்கி 10 நாட்களாகி விட்ட நிலையில் புதிய ரூ.500 தாள்கள் இன்னும் தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. இவ்வாறாக மத்திய அரசின் அரைகுறை செயல்பாடுகள் தான் வணிகத்தையும், மக்களையும் முடக்கியுள்ளன. இதேநிலை நீடித்தால் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்.
