கடலுார் மாவட்டம் சிதம்பரம் மக்களவை  தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். சிதம்பரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை கடுமையாகத் தாக்கி பேசினார் ராமதாஸ்.


 “சிதம்பரத்தில் அதிமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் விசிக வேட்பாளரை பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவருக்கு அடையாளம் கொடுத்தது யார் தெரியுமா? நான்தான். கடந்த காலங்களில், மதுரை வட்டார சுவர்களில் வீச்சரிவாளுடன் ரத்தம் சொட்டும் காட்சியை அதிகம் பார்க்க முடியும். இந்த நிலையைப் போக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதற்காக திருமாவளவனுடன் கூட்டு சேர்த்தேன்.
அவருக்காக பொதுக்கூட்டம் நடத்தில் அதில் பேச வைத்தேன். கட்சித் தொண்டர்களுக்கு அரசியல் பயிலரங்கம் நடத்தி அவர்களை நல்வழிப்படுத்துங்கள் என்று அவரிடம் சொன்னேன். ஆனால்,  அவர் அதையெல்லாம் கேட்கவில்லை. அவருடைய இளைஞர்களுக்கு வேறு மாதிரியாகப் பயிற்சி கொடுத்திருப்பது பிறகுதான் தெரிய வந்தது. விசிக கொடியைப் பார்த்தாலே மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு மாறியது.


திருமாவளவன் எனக்கு அம்பேத்கர் விருது, தமிழ் குடிதாங்கி என விருதுகளை எல்லாம் கொடுத்தார். திண்டிவனத்தில் உள்ள என் தோட்டத்தில் அம்பேத்கர் படத்தை அவர் கையால் திறக்க செய்தேன். ஈழத்தமிழர் பிரச்னையில் இணைந்து போராடினோம். ஆனால், அவரிடம் மாற்றம் எதுவும் தென்படவில்லை. அவருடைய போக்கு, மக்களுக்கு எதிராகவும் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலேயே இருந்தது. அவர் நடத்துவது கட்சியே இல்லை. அந்தக் கட்சி நாட்டுக்கு தேவையில்லை.
 நாமெல்லாம் மக்கள் நலனுக்காக கட்சி நடத்துகிறோம். அவரோ வேறு காரணங்களுக்காக கட்சி நடத்துகிறார். அவருடைய நடவடிக்கை எல்லை மீறியது. அதனால்தான், 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படையாக அறிக்கை மூலம் என் ஆதங்கத்தை தெரிவித்தேன். தமிழகத்தில் நல்ல ஆட்சி நடந்துவருகிறது. இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முயற்சி செய்துவருகிறார். கோபத்தில் ஏதேதோ பேசுகிறார்.

 
அவருடைய தந்தை கருணாநிதியிடம் கூறி, ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க செய்ததே நான்தான். ஆனால், என்னைப் பற்றி ஏதோதோ பேசுகிறார். அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலை யில்லை. நாங்கள் நல்ல அரசியல் நடத்துகிறோம்.”
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.