அரசு ஏன் இதை செய்யவில்லை? முயற்சி கூட எடுக்கவில்லையே... முதல்வர் எடப்பாடி எந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

இது அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் விமர்சிக்க நான் விரும்பவில்லை. அதேநேரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதாக நினைத்துக்கொண்டு வீண் முயற்சிகளில் ஈடுபட்டுக் காலத்தை இழப்பது வருத்தமளிக்கிறது.

சட்டப்பேரவையில் இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உறுப்பினர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், அதில் மேலாண்மை வாரியத்தை அடுத்த 6 வாரங்களில் அமைக்க வேண்டும்; இந்த விஷயத்தில் இனியும் காலநீட்டிப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டிருப்பதையும் மேற்கோள்காட்டியுள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் ஒருபடி மேலே போய், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை; அதனால் உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவதற்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதைக் கேட்கும்போது தான் காவிரிப் பிரச்சினையின் தீவிரம் முதலமைச்சருக்கு இன்னும் புரியவில்லையா, அல்லது புரிந்து கொண்டும் புரியாதது போல நடிக்கிறாரா என்ற ஐயம் ஏற்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி கூறுவதைப் போல இது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அப்படியே செயல்படுத்த மத்திய அரசு நேர்மையானதுமல்ல” என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ், இது தொடர்பான பழைய நிகழ்வுகளைப் பட்டியலிட்டுள்ளார்.

“முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நினைப்பதைப் போல மத்தியில் ஆளும் கட்சிகள் நேர்மையாகவும், நடுநிலையாகவும் செயல்பட்டிருந்தால் 2007ஆம் ஆண்டு நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய உடனேயே அமைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்; அப்போது இல்லாவிட்டாலும் 2013ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட போதாவது மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்; அதன் பின் 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பிறகு அடுத்த 2 வாரங்களில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி வாக்குறுதி அளித்தபோதாவது அது சாத்தியமாகியிருக்க வேண்டும்;

2016ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அடுத்த 4 நாட்களில் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நேரத்திலாவது அதைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை அரசு செய்ததா?

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற நெருக்கடி கடந்த காலங்களில் 4 முறை ஏற்பட்ட போதும் அதை மதிக்காத மத்திய அரசு, இப்போது மட்டும் அதை மதித்து மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்று முதலமைச்சர் நம்புவது விந்தையாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

அண்மையில் சென்னை வந்த மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க உத்தரவாதம் அளிக்க முடியாது’’ என்று கூறினார். இதைவிட ஒருபடி மேலே போய், மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை என்று நீர்வளத் துறை செயலர் யு.பி.சிங் கூறிவருகிறார்.

இவற்றைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ள ராமதாஸ், “இத்தகைய நிலையில் குறித்த காலத்தில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு விடும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் எடப்பாடி கூறுவதைப் பார்க்கும்போது அவர் எந்த உலகில் வாழ்கிறார் எனக் கேட்கத் தோன்றுகிறது’’ என கூறியுள்ளார்