எம்.ஜி.ஆரின் மறைவால் 13% இட ஒதுக்கீடு சாத்தியமாகவில்லை. எம்.ஜி.ஆர் தயாரித்த கோப்பையும் அதிகார பீடத்தில் சிலர் அழித்து விட்டனர் என ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராமதாஸ், ‘’தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு கோரி 1987-ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் ஒரு வாரத்திற்கு தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்திய போது, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியும், அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டும் 21 பேரை படுகொலை செய்தனர். வன்னிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து ஒடுக்குமுறை ஏவப்பட்டது. அப்போதைய தமிழக முதலமைச்சர்  எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்ததால் இந்த நிகழ்வுகள் குறித்து அவருக்கு எதுவும் தெரியவில்லை; அதிகாரிகளும், அமைச்சர்களும் அவரிடம் இந்த விவரங்களை தெரிவிக்கவும் இல்லை.

எனினும், பின்னாளில் இதுகுறித்த விவரங்கள் பின்னாளில் எம்.ஜி.ஆருக்குத் தெரிந்தன. சிகிச்சை முடிந்து தாயகம் திரும்பிய எம்.ஜி.ஆர். என்னை அழைத்து இடஒதுக்கீட்டு விவகாரம் குறித்து பேச நினைத்தார். என்னை மட்டும் அழைத்துப் பேசினால், அது மற்றவர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகும்  என்பதால், அனைத்து சாதி தலைவர்களையும் பேச்சுவார்த்தைக்கு எம்.ஜி.ஆர் அழைத்தார். அதன்படி 1987-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர்  மாளிகையின் பத்தாவது மாடியில் பேச்சு நடைபெற்றது. அப்பேச்சுக்களில் பங்கேற்ற நான், வன்னியர்களின் சமூகநிலை, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவேண்டியதன் தேவை ஆகியவை குறித்தும் புள்ளி விவரங்களுடன் 1.00 மணி நேரம் மிகவும் உணர்ச்சிமயமாக பேசினேன்.

‘‘ தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவமே இல்லை. அதற்கு ஒரே தீர்வு வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குவது தான். அந்தக் கோரிக்கையை உங்களிடம் வலியுறுத்த வேண்டும்; அதற்காக உங்களை சந்தித்து 10 நிமிடமாவது பேச வேண்டும் என்று 7 ஆண்டுகளாக முயன்று வருகிறோம். உங்கள் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனை பலமுறை சந்தித்து நேரம் கேட்டோம். ஆனால், உங்களை சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இப்போது தான் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உங்களை முதன்முறையாக சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. மனு வடிவிலும், நேரடியாகவும் எடுத்துக் கூறிய எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால், மீண்டும் தீவிரமாக போராடுவதைத் தவிர வேறு வழியில்லை’’ என்றும் நான் எச்சரித்தேன்.

தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது, வன்னியர்களுக்கு ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்ட அமைச்சர்கள் குறித்து  முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் கூறினோம். எங்களின் குற்றச்சாட்டுகளை அமைச்சர்களால் மறுக்க முடியவில்லை. பதில் கூற முடியாமல் தடுமாறினார்கள். அதேபோல், காவல்துறை தலைவர் ஸ்ரீபாலும், அவரது காவலர்களும் செய்த அட்டூழியங்களையும் பட்டியலிட்டோம். வன்னியர்கள் மீது பொய் வழக்கு போடுவது அப்போதும் தொடர்வதாகக் கூறிய நான், அதே நிலை தொடர்ந்தால் அதற்கான விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் என்று வெளிப்படையாகவே எச்சரிக்கை செய்தேன்.

நான் பேசி முடித்தவுடன் அமைச்சர்களை எம்.ஜி.ஆர் கோபமாக பார்த்தார். அப்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் சரளமாக பேச முடியவில்லை. ஆனாலும்,‘‘இதல்லாம் என்கிட்ட ஏன் சொல்லலை?’’என்று திக்கித் தடுமாறி மிகுந்த கோபத்துடன் கேட்டார். அதற்கு பதில் கூற முடியாமல் அமைச்சர்களும், அதிகாரிகளும் தலைகுனிந்தனர். பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகு வீடு திரும்பிய எம்.ஜி.ஆர், தலைமைச்செயலகம் அமைந்திருந்த கோட்டை வளாகத்தில் மஞ்சள் ஆடை, மஞ்சள் கொடிகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்ததையும், அவர்கள் எனக்கு ஆதரவாக முழக்கமிடுவதையும் பார்த்து அசந்து போனார் அவர்.

அடுத்த ஒரு மாதத்திற்குள் எம்.ஜி.ஆர் காலமானார். அதற்கு முன்பாகவே வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 13% தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கான கோப்பு ஒன்றையும் தயாரித்தார். எம்.ஜி.ஆரின் மறைவால் 13% இட ஒதுக்கீடு சாத்தியமாகவில்லை. எம்.ஜி.ஆர் தயாரித்த கோப்பையும் அதிகார பீடத்தில் சிலர் அழித்து விட்டனர்’’ எனத் தெரிவித்துள்ளார்.