Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாடு நாள் கொண்டாடினால் மட்டும் போதுமா..? அட்வைஸ் செய்யும் மருத்துவர் ராமதாஸ்..!

தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டும் என்ற தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ள தமிழக அரசு, பிற மாநிலங்களில் உள்ள தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதற்கு தேவையான அரசியல் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாளான ஜனவரி 14-ஆம் தேதியையும் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முன்வர வேண்டும்.

ramadoss request tamilnadu government
Author
Tamil Nadu, First Published Oct 31, 2019, 5:49 PM IST

தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் நேரத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள உறுதியேற்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக நாளை கொண்டாடப்படவுள்ளது. தமிழ்நாட்டு மக்களின்  நீண்ட நாள் கோரிக்கை, நாளை அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா விடுதலையடைந்து குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட போது 9 மாநிலங்களும், 3 யூனியன் பிரதேசங்களும் மட்டுமே இருந்தன. எனினும், பின்னர் நாடு முழுவதும் வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து 1956-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது இந்தியா 14 மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அதுவரை ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்த சென்னை மாகாணத்தின் பெரும்பகுதிகள் அங்கு வாழும் மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் பிரித்து, புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு என்ற பெயரில் இப்போது அழைக்கப்படும் நிலப்பரப்பு மட்டுமே புதிய சென்னை மாகாணமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலப்பரப்பு  பின்னர் 1969-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ramadoss request tamilnadu government

சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்களின் அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ஒன்றாம் தேதியை,  தங்கள் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளாக கொண்டாடி வரும் நிலையில், தமிழகமும் நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தது. பிற தமிழ் அமைப்புகளும் இதுதொடர்பாக விடுத்த கோரிக்கையை  ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவித்தார். அதன்படி, நவம்பர் ஒன்றாம் தேதியான நாளை, அரசு சார்பில் தமிழ்நாடு நாளாக அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளை தமிழ்நாட்டு மக்களும், தமிழ் உணர்வாளர்களும் மிகவும் உற்சாகமாக கொண்டாட வேண்டும்.

ramadoss request tamilnadu government

அதேநேரத்தில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதுடன் மட்டுமே கடமை முடிந்து விட்டதாக அரசும், மக்களும் கருதிவிடக் கூடாது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகம் இரு வகைகளில் பாதிக்கப்பட்டது. முதலாவது சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் பிற மாநிலங்களுடன் சேர்க்கப்பட்டன; இரண்டாவது பிற மாநிலங்களில் உள்ள தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்படவில்லை. இதுபோன்று தமிழ்நாட்டிற்கு  ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளையும் போக்க தமிழ்நாடு நாளில் தமிழக அரசு உறுதியேற்க வேண்டும்.

ramadoss request tamilnadu government

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகம் மொத்தம் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிகளை இழந்தது.இதில் பாதி, அதாவது 32 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை நாம் ஆந்திராவிடம் இழந்தோம். தமிழ்நாட்டில் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின் அங்கமாக விளங்கிய 9 வட்டங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன. இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள தமிழர்களும், இப்பகுதிகளைச் சேர்ந்த மக்களும் போராடியதன் பயனாக 1961-ஆம் ஆண்டில் திருத்தணி வட்டமும், பள்ளிப்பட்டு பகுதியும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. மீதமுள்ள 8 வட்டங்களும் இன்று வரை ஆந்திரத்தின் ஓர் அங்கமாகவே இருந்துவருகின்றன. திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்ட இப்பகுதிகளில் வாழும் மக்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தமிழர்கள் என்ற போதிலும், இவர்களால் அரசியல் உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட எந்த உரிமைகளையும் வென்றெடுக்க முடியவில்லை. பாலாறு சிக்கல், செம்மரக்கடத்தல் என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவது ஆகியவற்றுக்கும் தமிழர் பகுதிகள் ஆந்திராவில் இணைக்கப்பட்டதே காரணமாகும்.

ramadoss request tamilnadu government

அதேபோல், முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னனின் ஆளுகைக்குள் இருந்து பின்னாளில், திரிக்கப்பட்ட வரலாற்றின்படி, திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு மாற்றப்பட்ட தேவிகுளம், பீர்மேடு ஆகியவை தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் ஆகும். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, இப்பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படாதது தான் முல்லைப் பெரியாறு விவகாரம் சிக்கலானதற்கு காரணம் ஆகும். இடுக்கி மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட அந்த பகுதிகளில் வாழும் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதற்கும் இதுதான் காரணம் ஆகும்.

தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டும் என்ற தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ள தமிழக அரசு, பிற மாநிலங்களில் உள்ள தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதற்கு தேவையான அரசியல் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாளான ஜனவரி 14-ஆம் தேதியையும் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios