Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தை திட்டமிட்டு புறக்கணிக்கிறீர்களா..? மத்திய அரசுக்கு எதிராக அதிரடி கிளப்பும் ராமதாஸ்..!

முதல்கட்ட விமான சேவைக்காக கடைப்பிடிக்கப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் பார்த்தால், இரண்டாம் கட்டத்தில் தமிழகத்திற்கு குறைந்தது 20 விமானங்களாவது இயக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அண்டை மாநிலமான கேரளத்திற்கு இரண்டாம் கட்டமாக 31 விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட இயக்கப்படாததை திட்டமிட்ட புறக்கணிப்பாகவே பார்க்கத் தோன்றுகிறது.

ramadoss questions about rescuing tamilians in foreign countries
Author
Tamil Nadu, First Published May 13, 2020, 2:22 PM IST

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க சிறப்பு விமானங்கள் ஓதுக்கீடு செய்யாதது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக, பல நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்க, வரும் 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 31 நாடுகளில் இருந்து 149 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. ஆனால், தமிழ்நாட்டுக்கு ஒரு விமானம் கூட இயக்கப்படவில்லை. வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்க பல்வேறு மாநில அரசுகளிடமிருந்து இருந்து ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 200 விண்ணப்பங்களை மத்திய அரசு பெற்றுள்ளது. அதிகபட்சமாக கேரளத்திலிருந்து 60 ஆயிரத்து 369 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக தமிழக அரசு தான், கடந்த மே 10-ம் தேதி வரை 14 ஆயிரத்து 679 விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. அத்தகைய சூழலில் கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டுக்குதான் அதிக விமானங்கள் இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

ramadoss questions about rescuing tamilians in foreign countries

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான முதல்கட்ட விமான சேவை கடந்த 7-ம் தேதி தொடங்கி நாளை (14-ம் தேதி) வரை இயக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு மொத்தம் 64 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் கடந்த 10-ம் தேதி வரை 5,163 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் 883 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதுவரை சிங்கப்பூர், குவைத், மலேசியா, மஸ்கட் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு 3 விமானங்கள், திருச்சிக்கு இரு விமானங்கள், கொச்சி மற்றும் மும்பை வழியாக சென்னைக்கு தலா ஒரு விமானம் என மொத்தம் 7 விமானங்களில் தமிழகத்திற்கு பயணிகள் வந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து நாளை (14-ம் தேதி) சென்னைக்கு ஒரு சிறப்பு விமானம் வரவிருக்கிறது.

ramadoss questions about rescuing tamilians in foreign countries

முதல்கட்ட விமான சேவைக்காக கடைப்பிடிக்கப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் பார்த்தால், இரண்டாம் கட்டத்தில் தமிழகத்திற்கு குறைந்தது 20 விமானங்களாவது இயக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அண்டை மாநிலமான கேரளத்திற்கு இரண்டாம் கட்டமாக 31 விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட இயக்கப்படாததை திட்டமிட்ட புறக்கணிப்பாகவே பார்க்கத் தோன்றுகிறது. தமிழ்நாட்டுக்கு மே 31-ம் தேதி வரை விமானங்களையோ, ரயில்களையோ இயக்க வேண்டாம் என்று தமிழக அரசு பிரதமரிடம் கோரிக்கை வைத்ததால் தான் தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்படவில்லை என்று சமூகவெளிகளில் ஒரு கருத்து பரப்பப்படுகிறது. இது தவறான புரிதலின் வெளிப்பாடே ஆகும். தமிழக அரசின் கோரிக்கை பயணிகள் விமானம், ரயில்கள் இயக்கம் தொடர்பானது தானே தவிர, மீட்பு விமானங்கள் சம்பந்தப்பட்டது அல்ல. அதுமட்டுமின்றி, 14 ஆயிரத்து 679 பேரை மீட்க மத்திய அரசிடம் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் இது ஒரு காரணமாக இருக்க வாய்ப்பில்லை.

ramadoss questions about rescuing tamilians in foreign countries

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகளில் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர். அந்த நாடுகளில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அங்குள்ள தமிழர்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். தங்களை உடனடியாக தாயகம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது தான் அவர்களின் முதன்மை கோரிக்கையாக உள்ளது. இரண்டாம் கட்ட விமான சேவை அறிவிக்கப்பட்ட பிறகு நேற்றிரவு குவைத் நாட்டில் வாழும் தமிழர்களிடம் காணொலி வாயிலாக பேசினேன். அவர்கள் அனைவருமே தங்களை எப்படியாவது இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள் என்றுதான் மன்றாடுகின்றனர். மே 22-ம் தேதி வரை குவைத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படாது என்றால், அதற்குள்ளாக தங்களில் பலர் கரோனா தொற்றுக்கு ஆளாகி விடக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். மற்ற நாடுகளில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் மனநிலையும் இப்படியாகவே உள்ளது.

எனவே, வெளிநாடுகளில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களையும் தாயகத்திற்கு மீட்டு வர வசதியாக உடனடியாக சிறப்பு விமானங்களின் இயக்கத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடுமையான அழுத்தம் தரப்பட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios