கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த 3 நாட்களாக நோய்த்தொற்று இல்லாத பகுதிகளில் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.

நோய் தொற்று அதிகம் இருக்கும் பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது எனவும், கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்கடைகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்கப்படும் எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. அதன்படி தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் தலைநகர் சென்னையில் மதுக்கடைகள் திறக்க அனுமது வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 711 இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மதுக்கடைகள் திறப்பது கொரோனா வைரஸ் பரவுதலை மேலும் அதிகரிக்கும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

நேற்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது டாஸ்மாக் கடைகளை திறப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். புதுவையில் கடைகள் திறக்கப்படாத போது தமிழகத்தில் ஏன் திறக்கபடுகின்றன என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார். தனது ட்விட்டர் பதிவில், மதுவையே முதன்மை வருவாய் ஆதாரமாக கொண்டிருக்கும் புதுச்சேரியில் கூட மதுக்கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால்,  நாம்?. மதுக்கடைகள் திறக்கப்பட்டால் வீடுகளில் உள்ள மக்களின் கவனம் மது விற்கும் சாலைகளை நோக்கித் திரும்பும் என்பதால் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கேரளம் தடை  விதித்திருக்கிறது. கொரோனாவை கிட்டத்தட்ட ஒழித்துவிட்ட கேரளமே கட்டுப்பாடு காக்கும் போது தமிழகத்தில் இவ்வளவு அவசரம் தேவையா? என்று பதிவிட்டிருக்கிறார்.