Asianet News TamilAsianet News Tamil

பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு நான் தயார்... மு.க.ஸ்டாலினுக்கு பகிரங்கமாக சவால் விடுத்த ராமதாஸ்..!

திமுகவின் இந்த புதிய நாடகம் தமிழக மக்களிடம் எடுபடாது; தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். ஈழத் தமிழர்களுக்கு திமுக இழைத்த துரோகங்கள் குறித்து பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு நான் தயார்.... மு.க.ஸ்டாலின் தயாரா?" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Ramadoss publicly challenges MK Stalin
Author
Tamil Nadu, First Published Dec 18, 2019, 4:23 PM IST

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அஞ்சி, தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்திற்கு கஜினி முகமதுவைப் போன்று படையெடுத்த திமுக, இப்போது ஒரு சில இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழர்கள் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது என ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். 

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஈழத் தமிழர்களுக்கு பாமக துரோகமிழைத்து விட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு துணை நின்றதுடன், அதற்குக் கூலியாக புதிய அமைச்சரவையில் கூடுதல் துறைகளைப் பெற்றுக் கொண்ட திமுக, ஈழத் தமிழர் நலன் குறித்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமானது.

Ramadoss publicly challenges MK Stalin

குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவு அளித்ததன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைப்பதை பாமக தடுத்து விட்டது என்பது தான் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டு ஆகும். ஈழத் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து அவருக்கு சரியான புரிதல் இருந்திருந்தாலோ, ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறை இருந்திருந்தாலோ இப்படி ஒரு கருத்தை அவர் கூறியிருந்திருக்க மாட்டார். ஈழத் தமிழர்களின் தேவை இந்தியக் குடியுரிமை அல்ல. அவர்களின் கோரிக்கை இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான உத்தரவாதம் அல்லது இந்தியா அல்லது இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் வாழ்வதற்கான இரட்டைக் குடியுரிமைதான்.

2009-ம் ஆண்டு இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்ய துணை நின்றதால் ஏற்பட்ட அவப்பெயரில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைத்த அப்போதைய முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றச் செய்தார்.

Ramadoss publicly challenges MK Stalin

அதனடிப்படையில் அப்போதைய பிரதமருக்கு கடிதம் ஒன்றையும் கருணாநிதி எழுதினார். ஆனால், அதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை என்ற முழக்கத்தை திமுக கைவிட்டது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் குடியுரிமை பெற்று விட்டால், அதன்பின்னர் ஈழத்திற்குத் திரும்ப முடியாது. தங்களின் தாயகமான ஈழத்தை நிரந்தரமான இழந்து விடுவோம் என அஞ்சுகின்றனர். அதனால் தான் ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்றவர்களில் பெரும்பான்மையானோர் இன்னும் குடியுரிமை பெறாமல் வசிக்கின்றனர்.

அதேநேரத்தில் என்றாவது ஒரு நாள் தாயகம் திரும்ப இயலும் என்று நினைக்கும் ஈழத் தமிழர்கள், அதுவரை தமிழகத்தில் தாங்கள் கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோருகின்றனர். அதனால் தான் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எத்தகைய குடியுரிமை வேண்டும் என்பதை, அவர்களின் விருப்பம் அறிந்து அதற்கேற்றவாறு தீர்மானிக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது.

Ramadoss publicly challenges MK Stalin

ஆனால், தமிழக அரசியல் வரலாற்றையே அறியாத மு.க.ஸ்டாலின், ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பை அறியாமல், ஏதோ அவர்களைக் காக்க வந்த தேவதூதனே தாம்தான் என்பதைப் போல பேசுகிறார். ஒருவேளை மு.க.ஸ்டாலின் மூச்சு முட்ட பேசுவதைப் போல ஈழத் தமிழர்களின் தேவை இந்தியக் குடியுரிமை என்றாலும் கூட, அதற்காக இலங்கைப் பிரச்சினை தீவிரமடைந்த 1983-ம் ஆண்டுக்கு பிறகு திமுக தமிழகத்தை ஆட்சி செய்த 12 ஆண்டுகளிலும், மத்திய அரசில் அங்கம் வகித்த 18 ஆண்டுகளிலும் சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது தான் உண்மை. இதை திமுகவால் மறுக்க முடியுமா?

2009-ம் ஆண்டில் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று முப்பெரும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக, அதன்பின்னர் 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிலும் அதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரு தருணங்களிலும், மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது. இப்போது குடியுரிமைச் சட்டத்தில் எத்தகைய திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று திமுக கூறுகிறதோ, அத்தகைய திருத்தங்களை அப்போதே காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்றச் செய்திருக்கலாம். அதை செய்யாதது ஏன் என்பதை ஸ்டாலின் விளக்குவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

ஈழத் தமிழர்களுக்காக இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக, ஈழத்தில் போர் நடந்த போது நடத்திய நாடகங்களும், அடித்த பல்டிகளும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதவை. இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது கருணாநிதி நடத்திய 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை மறக்க முடியுமா? இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் தான் சாகும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிட்டேன் என்று கூறிய அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம், "இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்களே?" எனக் கேட்ட போது, "மழை விட்டு விட்டது.... தூவானம் விடவில்லை" என்று நக்கல் செய்ததை மன்னிக்க முடியுமா?

இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தபோது, டெல்லியில் முகாமிட்டு, திமுகவுக்குக் கூடுதல் அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் கருணாநிதி பேரம் நடத்தியதை மன்னிக்க தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை. அவ்வளவு ஏன்? விடுதலைப் புலிகள் இயக்கமே இல்லாமல் போய்விட்ட நிலையில், அந்த இயக்கத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்ற மக்களவையில் திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசினாரே? ஈழத் தமிழர் விடுதலைக்காகப் போராடிய அமைப்பை இதைவிட மோசமாக கொச்சைப்படுத்த முடியுமா?

Ramadoss publicly challenges MK Stalin

திமுகவைப் பொறுத்தவரை ஈழத் தமிழர் நலனுக்காக எதையும் செய்ததும் இல்லை.... செய்யப் போவதும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அஞ்சி, தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்திற்கு கஜினி முகமதுவைப் போன்று படையெடுத்த திமுக, இப்போது ஒரு சில இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்பதற்காக இப்போது ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களைப் போல நடிக்கிறார்கள். திமுகவின் இந்த புதிய நாடகம் தமிழக மக்களிடம் எடுபடாது; தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். ஈழத் தமிழர்களுக்கு திமுக இழைத்த துரோகங்கள் குறித்து பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு நான் தயார்.... மு.க.ஸ்டாலின் தயாரா?" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios