Asianet News TamilAsianet News Tamil

அசரவைக்கணும்... அதிரவைக்கணும்... அடுத்த போராட்டத்திற்கு நாள் குறித்த ராமதாஸ்!! தேர்தலுக்கு முன்பே இது நடக்குமா?

இந்த விஷயத்தில் ஆளுனர் முடிவெடுக்காமல் தாமதம் செய்வது அறமான, நியாயமான செயல் அல்ல என்றும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Ramadoss protest against Governor banwarilal prohit
Author
Chennai, First Published Feb 12, 2019, 12:21 PM IST

ஆளுனரின் மனதை கோரிக்கைகள் அசைக்காத நிலையில், இந்த போராட்டங்களாவது அசைத்துப் பார்க்க வேண்டும். அதற்காக அற்புதம் அம்மாளின் நீதிகேட்கும் பயணப் போராட்டம் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கோவையில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் நீதி கேட்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆளுனர் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது.

செய்யாத குற்றத்திற்காக பெற்ற மகனை சிறைக் கொட்டடிக்கு கொடுத்து விட்டு, அப்பாவி மகன் எப்போது விடுதலையாவான் என்று ஏங்கித் தவிப்பதை விட ஒரு பெரிய கொடுமையை எந்தவொரு தாயாலும் அனுபவிக்க முடியாது. இராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக, 27 ஆண்டுகளுக்கு முன் 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி இரவு சி.பி.ஐயின்  சிறப்பு புலனாய்வுப் பிரிவு கூறியதை நம்பி, அதற்கு அடுத்த நாள் காலையில் 19 வயது மகன் பேரறிவாளனை விசாரணைக்குழுவிடம் ஒப்படைத்த அந்த தாயார், அதன் பின் 28 ஆண்டுகளாகியும் ஒரு பொழுதைகூட மகனுடன் மகிழ்ச்சியாக கழிக்க முடியவில்லை.
Ramadoss protest against Governor banwarilal prohit

அதன்பின்னர்சிறப்பு புலனாய்வுப் பிரிவு அலுவலகம், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், உச்சநீதிமன்றம்,  வேலூர் மத்திய சிறை, புழல் சிறை என்று மகனைக் காணவும், முதலமைச்சர் அலுவலகம், வழக்கறிஞர்கள் அலுவலகம், ஆளுனர் மாளிகை என்று மகனின் விடுதலைக்காக முறையிடவும் அலையத் தொடங்கிய  அந்த மூதாட்டியின் கால்கள் இன்னும் அலைந்தபடியே தான் உள்ளன. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை 2014-ஆம் ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தில் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட போது, 7 தமிழர்களும் எப்படியும் விடுதலையாகி விடுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்தது. அதன்பின் அவ்வப்போது அவர்களின் விடுதலை குறித்து நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் தென்பட்டாலும், 5 ஆண்டுகளாகியும்  இன்று வரை விடுதலை சாத்தியமாகவில்லை.
 

ஆட்சியாளர்களையும், அதிகாரவர்க்கத்தினரையும், ஆளுனரையும் சந்தித்து கோரிக்கை மனுக்களைக் கொடுத்து கொடுத்து சலித்துப் போன அற்புதம் அம்மாள், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஜனவரி 24-ஆம் தேதி கோவையில் தொடங்கி  தமிழ்நாடு முழுவதும் நீதி கேட்கும் நெடும்பயணத்தைத் தொடங்கியுள்ளார். கோவை, ஈரோடு, விருதுநகர், ராஜபாளையம், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உட்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தமது பயணத்தை அவர் நிறைவு செய்திருக்கிறார். செல்லும் இடங்களில் எல்லாம் 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த உணர்வுகளின் ஓசை இன்னும் ஆளுனர் மாளிகையை மட்டும் எட்டவில்லையோ? என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
Ramadoss protest against Governor banwarilal prohit

7 தமிழர்களையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 9&ஆம் தேதி தமிழக அமைச்சரவை நிறைவேற்றி தமிழக ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. இந்த விஷயத்தில் முடிவெடுக்கத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தீர்மானத்துடன் இணைத்து  தமிழக அரசு அனுப்பியிருந்தது. இத்தனைக்குப் பிறகும் இவ்விஷயத்தில் முடிவெடுக்க ஆளுனர் தயங்குவது ஏன்? எனத் தெரியவில்லை.
 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுனருக்கு அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் சரியாக 151 நாட்கள் ஆகி விட்டன. 7 தமிழர்கள் விடுதலைக்கு  எதிராக இருந்த அனைத்து முட்டுக்கட்டைகளும் தகர்க்கப்பட்டுவிட்டன. அவ்வாறு இருந்தும் இந்த விஷயத்தில் ஆளுனர்புரோகித் முடிவெடுக்காமல் தாமதம் செய்வது அறமான, நியாயமான செயல் அல்ல.
 

7 தமிழர்கள் விடுதலையில் ஆளுனருக்கு உடன்பாடு இல்லை என்றால் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை திருப்பி அனுப்பியிருக்கலாம். ஒருவேளை அவ்வாறு அனுப்பியிருந்தால் தமிழக அரசு, அதேபரிந்துரையை மீண்டும் அனுப்பும்பட்சத்தில் அவர்களை விடுதலை செய்து ஆணையிடுவதைத் தவிர ஆளுனருக்கு வேறு வழியில்லாமல் போய்விடும். ஆனால், அதையும் செய்யாமல் அமைச்சரவையின் பரிந்துரையை கிடப்பில் போட்டிருப்பதன் பின்னணியில் ஏதோ சதி இருப்பதாகத் தான் தோன்றுகிறது.

7 தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி ஒருபுறம் அற்புதம் அம்மாள் நீதி கேட்கும் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மற்றொரு புறம் முருகனும், நளினியும் சிறையில் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ஆளுனரின் மனதை கோரிக்கைகள் அசைக்காத நிலையில், இந்த போராட்டங்களாவது அசைத்துப் பார்க்க வேண்டும். அதற்காக அற்புதம் அம்மாளின் நீதிகேட்கும் பயணப் போராட்டம் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை மதித்து, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்து உடனடியாக ஆளுனர் ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios