Ramadoss post his past ask justice but got jail

கேட்டது நீதி... கிடைத்தது சிறை: கந்தக பூமியில் வெந்து மீண்ட நாட்கள் என்ற தலைப்பில் தான் அனுபவித்த சிறை சம்பவங்களை நினைவு கூர்ந்து முகநூல் பக்கத்தில் எழுத்தும் கட்டுரையில் இன்று...

2. நான் தவித்தேன், துடித்தேன்... சொந்தங்கள் கதறினர்

விழுப்புரம் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்க ஆணையிடப்பட்ட பின்னரும் திட்டமிட்டு என்னையும், என்னுடன் கைதான பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட சொந்தங்களையும் வேண்டுமென்றே காவல்துறை அலைக்கழித்தது.தொடர்ந்து பல்வேறு அலைக்கழிப்புக்குப் பிறகு மே 1-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு என்னை திருச்சி மத்திய சிறைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். நான் ஏற்கனவே முதுகுத் தண்டு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கிட்டத்தட்ட 16 மணி நேரம் அழைக்கழிக்கப்பட்டதால் முதுகு வலி தாங்க முடியாமல் துடித்துப்போனேன்.

பாழடைந்த கட்டிடம்

தொடர்ந்து சிறை வளாகத்தில் சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டனர். சோதனை முடிந்து சிறைக்குள் சென்ற பின்னர் இன்னல்கள் அதிகரித்தன. சிறையில் பாழடைந்த, பயன்பாட்டில் இல்லாத , பாலைவனம் போன்று வெப்பம் தகிக்கக்கூடிய ஓர் கட்டிடத்திற்கு என்னை அழைத்துச் சென்ற சிறைத் துறையினர், அங்குள்ள 23 செல்களில் ஒன்றில் அடைத்து சிறை வைத்தனர். அந்தக் கட்டிடம் இலங்கை அகதிகளை அடைத்து வைப்பதற்கான சிறப்பு முகாமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இலங்கை அகதிகள் அடிக்கடி மரத்தில் ஏறி போராட்டம் நடத்துவது வழக்கம் என்பதால், அதைத் தடுப்பதற்காக அங்கிருந்த மரங்கள் அனைத்தையும் சிறைத்துறையினர் வெட்டி வீழ்த்தி விட்டனர். இதனால் அந்தப் பகுதி வெப்பம் நிறைந்து, காற்றோட்டம் இல்லாமல் இருந்தது.

தொண்டர்கள் கண்ணீர்

தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவாக திருச்சியில் தான் 105 டிகிரி வெப்பம் பதிவானது என்பதால், அதிகாலை வேளையிலும் கோடையின் வெப்பம் தகித்தது. தமிழகம் முழுவதையும் வாட்டி வதைக்கும் மின்வெட்டு திருச்சியையும் விட்டு வைக்க வில்லை. ஒரு மணி நேரத்திற்கு மின்சாரம் வந்தால் அடுத்த ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப் பட்டது. இதனால் நான் அடைக்கப்பட்டிருந்த அறை இருளில் மூழ்கி விடும். நான் அடைக்கப்பட்டிருந்த அறையில் மின் விசிறி இல்லாததால் வியர்வை மழைபோல் கொட்டத் தொடங்கி விடும். இதனால், சொல்ல முடியாத அவதிகளுக்கு உள்ளானேன். உறக்கமின்றி தவித்தேன்.

அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத தொண்டர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த போர்வைகளை மடித்து விசிறி போல விசிறினர். ஆனாலும் வெப்பத்தின் கொடுமையை தாங்க முடியவில்லை. அதனால் மேலாடைகளை களைந்து விட்டு தரையில் படுத்தேன்; அப்போதும் உறக்கம் வராமல் தவித்தேன்... துடித்தேன். என்னுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொண்டர்கள் அனைவரும் இந்தக் காட்சியை பார்த்து கண்ணீர் விட்டு கதறினர். என்னைப் போலவே என்னுடன் சிறை சென்றவர்களும் சிறையில் அடைக்கப்பட்ட இரவுப் பொழுதில் உறங்கவில்லை.

தாயைக் காப்பது போன்று எனக் காத்த ஜி.கே.மணி

இந்த தருணத்தில் என்னுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜி.கே.மணி எனக்காக துடித்த துடிப்புகளையும், செய்த செயல்களையும் நினைவு கூறியாக வேண்டும். ஒரு தாய் வேதனையில் துடிக்கும் போது மகன் அல்லது மகள் எப்படி வேதனைப்படுவார்களோ அதேபோல் ஜி.கே. மணி துடித்துப் போனார். சிறை அதிகாரிகளுடன் சண்டையிட்டு எனக்கு குறைந்தபட்ச வசதிகளாவது செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினார். சொந்தங்களுடன் சொந்தமாக இணைந்து எனது அவதிகளைக் குறைப்பதற்கான செயல்களில் ஈடுபட்டார். அப்போது நடந்த நிகழ்வுகளையெல்லாம் இப்போது அசை போட்டு பார்க்கும் போது, ஆட்சியாளர்கள் இழைத்த கொடுமைகள் கோபத்தை ஏற்படுத்தினாலும் ஜி.கே.மணி மற்றும் அவரைப் போன்ற பாட்டாளிகளை சொந்தங்களாகப் பெற்றது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. இவர்கள் தான் எனது பலம்.... எனது வரம்.

ஜி.கே. மணிக்கு அடுத்தபடியாக நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது எனது உதவியாளர் தண்டபாணியைப் பற்றித் தான். சிறையில் நான் பட்ட அவதிகளைக் குறைத்தவர் அவன் தான். சிறையில் எனது அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் அவன் தான் கவனித்துக் கொண்டான். அவனை எனது உதவியாளராக பெற்றதில் நான் எப்போதும் பெருமிதம் கொள்வேன்.

46 பேர் இடத்தில் 567 பேர் அடைப்பு

நான் அடைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் மொத்தம் 23 செல்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் இருவர் வீதம் மொத்தம் 46 பேரை மட்டுமே அங்கு அடைக்க முடியும். ஆனாலும், சிறைத்துறையினர் மேலிடத்து உத்தரவின்படி வேண்டுமென்றே ஒரு செல்லுக்கு 20 முதல் 25 பேர் வீதம் மொத்தம் 567 பேரை அடைத்து வைத்தனர். இதனால் நானும், பாட்டாளித் தொண்டர்களும் அறைக்குள் உறங்கவோ அமரவோ முடியாமல் தவித்தனர். சிறையில் குடிக்கவோ, குளிக்கவோ போதிய தண்ணீர் இல்லாததால் எங்களின் அவதி அளவிட முடியாத அளவுக்கு அதிகரித்தது. சிறை அறையில் அனைவரும் குளிக்க முடியாது என்பதால் திறந்த வெளியில் தான் குளிக்க வேண்டியிருக்கிறது. மே-1 ஆம் தேதி காலையில் மற்ற சிறைவாசிகள் பயன்படுத்திய கழிப்பிடத்தையும், குளியலறையையுமே நானும் பயன்படுத்தினேன். இவையெல்லாம் உடல்ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தினாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு பாட்டாளித் தொண்டர்களுடன் ஒன்றாகக் கழித்தது மனதுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது.

16 மணி நேரத்திற்கு மேல் அலைக்கழிக்கப்பட்டதாலும், சிறைக்கு வந்த பிறகும் உறங்க முடியாததாலும் மே-1 ஆம் தேதி காலையில் எனது முதுகுவலி உச்சகட்டத்தை அடைந்தது. எனக்கு சிறையில் முதல் வகுப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று விழுப்புரம் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தாலும் புதன்கிழமை மதியம் வரை முதல் வகுப்பு வசதிகள் வழங்கப்படவில்லை. முதுகுவலியால் நான் துடித்ததை தாங்கிக்கொள்ள முடியாத தொண்டர்கள் சிறை நிர்வாகத்தை வலியுறுத்தியதைத் தொடர்ந்து மே&1 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு எனது அறையில் ஓர் இரும்பு கட்டில் போடப்பட்டது.

மூச்சுத் திணறல்

நான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் எனக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால், திருச்சி சிறை நிர்வாகமோ மற்ற கைதிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ, அதே உணவையே எனக்கும் வழங்கியது. நீரிழிவு நோய் காரணமாக அடிக்கடி பசி எடுக்கும்போதெல்லாம் கையுடன் எடுத்துச் சென்றிருந்த மாரி பிஸ்கட்டை சாப்பிட்டு சமாளித்துக் கொண்டேன். மதியத்திலும், இரவிலும் எனக்கும், மற்றவர்களுக்கும் பட்டை சோறு தான் வழங்கப்பட்டது. அதுவும் போதிய அளவில் வழங்கப்படாததாலும், குடிப்பதற்கு தண்ணீர் கூட தரப்படாததாலும் என்னுடன் வந்தவர்கள் இன்னலுக்குள்ளானார்கள். நீரிழிவு நோய் காரணமாக அதிகாலையிலேயே பசி எடுக்கும் என்பதால் முதல் நாள் இரவு வழங்கப்பட்ட உணவில் தண்ணீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் காலையில் கஞ்சியாக கரைத்து குடித்து வந்தேன். ஆட்சியாளர்களின் ஆணைக்கிணங்க காவல்துறையினரும், சிறைத்துறையினரும் பலவகையான அலைக்கழிப்புக்கு உள்ளாக்கியதாலும், சிறைக்குள் அனைத்து வகையான நெருக்கடிகளும் தரப்பட்டதாலும் உடல் அளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், மனதளவில் தளர்வடையாமல் மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராட உறுதி ஏற்றேன்.

மறுபுறம் சிறைக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. சிறையில் கடுமையான வெயில் காரணமாக என்னால் மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பெரிதும் அவதிக்குள்ளானேன். ஒரு கட்டத்தில் எனக்குத் தனி செல் ஒதுக்கப்பட்டது. பகலில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் அறையின் தரையில், தண்ணீர் செல்லும் துளையை அடைத்து விட்டு 4 அங்குலம் அளவுக்கு தேங்கி நிற்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி தேக்கி வைப்போம். அதன்மீது இரும்புக் கட்டிலைப் போட்டு அதன்மீது படுத்திருப்பேன். அப்போதும் வெயில் கொடுமையை தாங்க முடியாது. அதனால் மொத்தமான துண்டை தண்ணீரில் நனைத்து தலை மீது சுற்றிக் கொள்வேன். அந்த துண்டு காயக்காய தண்ணீரில் நனைத்துக் கட்டிக் கொள்வேன். அதேபோல் தரையில் தண்ணீரின் அளவு குறைந்தாலும் நிரப்பிக் கொள்வோம். அந்த அளவுக்கு வெயிலின் கொடுமையால் பாதிக்கப்பட்டேன்.

குடிநீருக்குத் தடை

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த எனக்கு அங்கு வழங்கப்பட்ட அசுத்தமான குடிநீர் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் வீட்டிலிருந்து குடிநீரைக் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதை சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
அதுமட்டுமின்றி, என்னை சந்திப்பதற்காக யாரெல்லாம் வருகிறார்கள் என்பதை கண்காணிப்பதற்காக எனது செல்லுக்கு வெளியில் உளவுத்துறை காவலர்கள் 3 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். இப்படியாக கொடுமைகள் தொடர்ந்தன. மறுபுறம் அவற்றுக்கு எதிரான சட்டப் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன.
பிணை, கைது .......... பிணை, கைது........ பிணை, கைது!

நாளை எழுதுகிறேன்