தமிழக அரசியல் வெளியில் கடந்த சில நாட்களாக மிக மூர்க்கமாக மோதிக் கொண்டிருக்கும் இரண்டு கட்சிகள் எது? என்று கேட்டால்....உங்களின் பதில் ‘அ.தி.மு.க. - தி.மு.க.’ என இருக்குமேயானால் நீங்கள் அரசியல் அப்டேஷனில் மிக மிக பின் தங்கியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். 

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடையேதான் கடந்த சில காலமாக கடும் மோதல்கள், முட்டல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதுவும் பா.ம.க.வை விட சில மடங்கு அதிகமாவே வீரியத்துடன் வி.சி.க. அக்கட்சியை போட்டுப் பொளக்கிறது. ‘என்னை அரசியல் பலிகடாவாக்க நினைத்தார் ராமதாஸ். இந்த துரோகத்தை இறுதிவரை என்னால் மறக்க முடியாது.’ என்று சமீபத்தில் பாய்ந்திருந்தார் திருமா.

 இந்த காயத்தின் ரத்தம் காய்வதற்குள், வி.சி.க.வின் துணை பொதுச்செயலாளரான வன்னி அரசோ தன் பங்கிற்கு சாத்தி எடுத்திருக்கிறார் பா.ம.க.வை இப்படி...

“பா.ம.க. செய்வது ஒரு நாடக அரசியல். ‘தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைத்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். இனி நூற்றியோரு சதவீதம் இந்த தவறை செய்யவே மாட்டோம்.’ என்று சொன்ன ராமதாஸ் இப்போது இரு திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணிக்கு அலை பாய்கிறார். திராவிட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக அவரது மகன் அன்புமணியே சொல்லி இதை ஒ ப்புக் கொண்டுவிட்டார். 

ஒரு கணிப்பு சொல்லவா?...இந்த தேர்தலுடன் பா.ம.க. காணாமலே போய்விடும்.  “பா.ம.க . அழிவை நோக்கிச் செல்கிறது. ராமதாஸ் தனது குடும்பத்துக்காக கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். குறிப்பாக தன் மகன் அன்புமணிக்காக அறத்தையும், தர்மத்தையும் அடகு  வைத்துவிட்டார் ராமதாஸ். பா.ம.க. என்றா பாசமுள்ள மகன் கட்சி. இனி அக்கட்சியோடு என்றுமே எங்களுக்கு கூட்டணி இல்லை.

 இதற்காக வன்னிய மக்களை நாங்கள் எதிர்க்கிறோம் என்று அர்த்தமில்லை. அம்மக்களோடு இணக்கமாக செல்லத்தான் நினைக்கிறோம். இனிமேல் எந்த சாதிய கட்சிகளுடனும் நாங்கள் இணைந்து செயல்படப் போவதில்லை.” என்று விளாசியிருக்கிறார் .
வன்னியரசுவின் இந்த வார்த்தைகள் ராமதாஸையும், அன்புமணியை மிக மிக மோசமாக காயப்படுத்தியுள்ளதால் கூடிய விரைவில் வி.சி.க. மீது ஏக அர்ச்சனைகள் அடங்கிய அறிக்கை ஒன்று தைலாபுரத்தில் இருந்து அப்லோடு ஆகலாம் என்று எதிர்ப்பார்ப்பு.