1. எம்.ஜி.ஆரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

* திரையுலகில் சாதிக்கத் தொடங்கியதில் தொடங்கி இறக்கும் வரை அமோக மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்தார். தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சர் ஆனவர். உயிருடன் இருந்திருந்தால் இன்னும் சில ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்திருப்பார். ஜெயலலிதாவை அரசியலில் இருந்து அகற்றியிருப்பார். ஆனால், முதலமைச்சர் என்ற முறையில் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்ததைத் தவிர சொல்லிக் கொள்ளும்படி ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

2. மக்களின் நிலங்களை கையகப்படுத்த அரசு முயன்றால் முதல் எதிர்ப்பு உங்களிடமிருந்து தான் வருகிறது. நீங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரியா?

* இல்லை. மக்களை பாதிக்கும் கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிரி. சென்னையில் துணைநகரங்கள் திட்டம் கொண்டுவரப்பட்ட போது எதிர்த்தேன். 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை காலி செய்து தனியார் நிறுவனங்களுக்கு கொடுப்பது தான் திட்டத்தின் நோக்கம். அதனால் மக்களுக்கு பயனில்லை. சொற்ப பணத்துக்காக அவர்கள் வீடுகளை இழந்து அனாதையாக தவிப்பார்கள். சென்னை விமான நிலைய விரிவாக்கம், செய்யூர் அனல் மின் நிலையம் ஆகிய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தினால் சில பெரிய மனிதர்களுக்கும், சில தனியார் முதலாளிகளுக்கும் பாதிக்கப்படும் என்பதற்காக அத்திட்டங்களை அரசுகள் கைவிட்டனவே அவற்றை என்னவென்று சொல்வீர்கள்.

பசுமைவெளி விமானநிலையம், சென்னை அதிவிரைவுப் பேருந்து திட்டம் ஆகிய வளர்ச்சித் திட்டங்களுக்காக இன்று வரை நான் மட்டும் தானே குரல் கொடுக்கிறேன். மக்களை அழித்து அவர்கள் மீது மாட மாளிகைகளை கட்டுவது வளர்ச்சி அல்ல என்பது தான் எனது நிலைப்பாடு.

3. அரசியலுக்கு வராவிட்டால் என்ன செய்து கொண்டு இருந்திருப்பீர்கள்?

* ஆதாயம் தேடி அரசியலுக்கு வந்தவன் அல்ல நான். நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மக்கள் படும் துயரங்களை அறிந்து கொண்டு அவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகத் தான் முதலில் வன்னியர் சங்கம், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கினேன். அதனால் என்னால் சமூகத் தீமைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு கைகளைக் கட்டிக் கொண்டு இருந்திருக்க முடியாது. ஒருவேளை அரசியலுக்கு வந்திருக்கா விட்டாலும் சமூகப் போராளியாக மக்களின் பிரச்சினைகளுக்காக போராடிக் கொண்டிருப்பேன்.

4. உங்களுக்குப் பிடித்த பெண் முதலமைச்சர்?

* மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. எளிமையின் வடிவம். வியக்க வைக்கும் போராட்ட குணம். இன்னமும் மக்களுக்கு மத்தியில் மிகவும் சாதாரணமான வீட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாக நீடித்த இடதுசாரி அரசை காங்கிரஸ் கட்சியால் அசைக்க முடியாத போது, அக்கட்சியிலிருந்து பிரிந்து வந்த மம்தா பானர்ஜியால் வீழ்த்த முடிந்தது என்றால் அதற்கு காரணம் மக்களுக்காக அவர்கள் நடத்திய போராட்டங்களும், அதன் மூலம் மக்களிடம் அவர் பெற்ற நம்பிக்கையும் தான். அவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணம்.

5. அண்மையில் நீங்கள் படித்த புத்தகங்கள்?

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் எழுதிய A Full Life: Reflections at Ninety , White House Diaryஆகிய புத்தகங்களை அண்மையில் படித்தேன். பெரும் பணக்கார குடும்பத்தில் ஜிம்மி கார்ட்டர் பிறந்திருந்தாலும் பாகப்பிரிவினை காரணமாக கார்ட்டருக்கு மிகக் குறைந்த அளவில் தான் நிலம் கிடைத்தது. அதனால், அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முதல் நாள் வரை நிலக்கடலை விவசாயம் செய்திருக்கிறார். அந்த அளவுக்கு அவர் எளிமையானவர்.

6. அண்மைக்காலத்தில் பாராட்டும் அளவுக்கு மத்திய அரசு ஏதேனும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளதா?

* மத்திய மனிதவள அமைச்சகம் இரு நாட்களுக்கு முன் ஒரு நல்லத் திட்டத்தை அறிவித்துள்ளது. பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை பாதியாக குறைப்பது, அதனால் மிச்சமாகும் நேரத்தில் மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்துவது என்பது தான் அந்தத் திட்டம் ஆகும். இதனால் மாணவர்களுக்கு மன உற்சாகம் ஏற்படுவதுடன், தரமான விளையாட்டு வீரர்களும் உருவெடுப்பர்.

7. விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பும் பிரச்சினை எது?

* தமிழக மீனவர்களின் பிரச்சினை தான். இதுவரை இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டும், சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டு வந்த தமிழக மீனவர்கள் இப்போது சிங்களக் கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கும் ஆளாகத் தொடங்கியுள்ளனர். தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் எல்லைகளைக் கடந்து மீன்பிடித்துக் கொள்ள அனுமதி வழங்குவது தான் இதற்கு சிறந்த தீர்வு ஆகும்.

8. உண்மையை சொல்லுங்கள் .... ஊழலை ஒழிப்பது சாத்தியமா?

* நிச்சயமாக சாத்தியம் தான். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் ஊழலை ஒழிப்பதற்கான திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கியுள்ளோம். அதை படியுங்கள். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் நிச்சயமாக ஒழிக்கப்படும்.

9. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பதாகைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது பற்றி?

* எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்பது அரசு விழா. அதை நடத்துபவர்கள் ஆட்சியாளர்கள். சட்டத்தை அவர்கள் தான் உருவாக்கி நடைமுறைப்படுத்துகின்றனர். ஆனால், அவர்களே சட்டத்தை மதிப்பதில்லை. நீதிமன்றம் தலையிட்டு தான் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டியுள்ளது. இதைவிட ஆட்சியாளர்களுக்கு பெரிய அசிங்கம் எதுவுமில்லை.

10. ஊழல்களில் மிகவும் ஆபத்தானதாக எதைக் கருதுகிறீர்கள்?

* கல்வித்துறை ஊழல்கள் தான் மிகவும் ஆபத்தானவை ஆகும். குறிப்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் நடைபெறும் ஊழல் படிப்படியாக இறங்கி அனைத்து நிலைகளிலும் தலைவிரித்து ஆடுகிறது. கல்வி கற்பிக்கப்பட வேண்டிய இடத்தில் ஊழல் கற்றுத்தரப்பட்டால் உலகம் உருப்பட வாய்ப்பில்லை. கல்வித்துறை ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும்.