Asianet News TamilAsianet News Tamil

வீட்டு வாடகை கொடுக்க முடியாத கூலித் தொழிலாளி.. தாக்குதல் நடத்திய போலீஸால் மனமுடைந்து தற்கொலை.. ராமதாஸ் ஆவேசம்!

புழல் காவல் ஆய்வாளர் பென் சாம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Ramadoss on puzlal police inspector
Author
Chennai, First Published Aug 2, 2020, 8:44 PM IST

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை அடுத்த புழல் வினாயகபுரத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் முன்பு புழல் காவல்துறை ஆய்வாளர் தாக்கியதால் அவமானமடைந்து தீக்குளித்த கூலித் தொழிலாளி சிகிச்சை பயனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. காவல் ஆய்வாளரின் மனிதநேயமற்ற இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி, தண்டிக்கப்பட வேண்டியதும் ஆகும்.Ramadoss on puzlal police inspector
கூலித்தொழிலாளி எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. ஊரடங்கு ஆணை காரணமாக வேலைக்கு செல்ல முடியாததால், வருமானமின்றி வாடியுள்ளார். அதனால் கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்த முடியவில்லை. தமிழ்நாட்டில் இது போன்ற சூழலில் வாடகை செலுத்த முடியாமல் ஏராளமானோர் உள்ளனர். அவர்களிடம் பெரும்பான்மையான வீட்டு உரிமையாளர்கள் கனிவுடன்தான் நடந்து கொள்கின்றனர். வாடகை செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்களிடம் கட்டாயப்படுத்தி வாடகை வாங்கக் கூடாது என அரசே கூறியுள்ளது. ஆனால், வாடகை செலுத்தாத சீனிவாசன் மீது அவரது வீட்டு உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் செய்தது மனிதநேயமற்ற செயல் என்றால், அதனடிப்படையில் அவரை காவல்துறை ஆய்வாளர் வீடு புகுந்து தாக்கியது சட்டவிரோத செயலும், குற்றமும் ஆகும்.

Ramadoss on puzlal police inspector
காவல்துறை பயிற்சியின்போது எந்தெந்த சூழலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என கற்றுத் தரப்படுகிறது. வாடகை தராதது சிவில் சிக்கல். இந்த சிக்கலில் காவல்துறை ஆய்வாளர் தலையிட்டு அத்துமீறியதும், வருவாய் இன்றி வாடியது தொழிலாளியை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் முன் கண்மூடித்தனமான தாக்கியதும் மன்னிக்க முடியாதவை. சாத்தான்குளம் நிகழ்வுக்குப் பிறகு காவல்துறையில் உள்ள சிலர் செய்யும் இத்தகைய செயல்களால் மொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது. புழல் காவல் ஆய்வாளர் பென் சாம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும்.
தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; குழந்தைகளின் கல்விச் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த தொழிலாளியின் குடும்பதிற்கு பா.ம.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios