ஆனாலும் கூட்டணில இருந்துகிட்டே அமித்ஷாவையும் மோடியையும் கிண்டல் பண்ண டாக்டர் ராமதாஸால மட்டும் தான் முடியும், சீதா பாட்டி, ராதாப்பாட்டி காசு, பணம், ஹவாலா,  துட்டு, புதுப்புது கட்சி! என்ற தலைப்பில் நேற்று ராமதாஸ் ஒரு பாட்டிக்கதை சொல்லி கலாய்த்துள்ளார்.  

அதில், ராதா பாட்டி: அக்கா.... எனக்கு ரொம்ப நாளா ஒரு கனவு அக்கா. ஆனா, அது நடக்குமான்னு தான் ஒரே டவுட்டா இருக்கு?

சீதா பாட்டி: இதுல என்னடி இருக்கு. அதான் அப்துல் கலாமே சொல்லியிருக்காருல்ல... எல்லாரும் கனவு காண வேண்டும்னு. நீயும் கனவு காணு. அதுல என்ன தப்பு. அது சரி... உன்னோட கனவு என்ன?

ராதா பாட்டி: வேற ஒண்ணும் இல்ல அக்கா. ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கணும். அப்படியே எல்லாத்தையும் ஆட்டிப் படைக்கணும்க்கா.

சீதா பாட்டி: அடிப்பாவி... திகிலூட்டுவதற்கும் ஓர் அளவு வேண்டாமாடி. நீ சொன்னதும் சொரக்குனு ஆயிடிச்சிடி. கட்சி ஆரம்பிக்கிறது அவ்வளவு காமெடியா போச்சாடி? அது சரி... கட்சி ஆரம்பிச்சா அதை நடத்த எவ்வளவு பணம் வச்சிருக்க?

ராதா பாட்டி: நீ வேற அக்கா... என்னிடம் ஏதுக்கா காசு. நானே டீயும், டிபனும் நீ வாங்கித் தருவியான்னு எதிர்பார்க்கிற ஆளு. என்னிடம் போய் காசு கேட்கிறியே?

சீதா பாட்டி: அடியே... சேவை செய்வதற்கும், உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அரசியல் கட்சி ஆரம்பிச்சது அந்தக் காலம்டி. இப்பல்லாம் கட்சி ஆரம்பிக்கிறதுக்கான காரணமே மாறிப் போச்சிடி.

ராதா பாட்டி: என்னக்கா சொல்ற?

சீதா பாட்டி: இப்ப கட்சி ஆரம்பிக்கிறவனெல்லாம் ஏதாவது பினாமி சொத்த பாதுகாக்க துடிப்பவனா இருக்கிறான். இல்லண்ணா கல்விக் கொள்ளை அடிக்கிறவனா இருக்கிறான். இப்படி சட்டவிரோத செயல் செய்றவனுங்க தான் அதுக்கு பாதுகாப்பு தேடுவதற்காக கட்சி ஆரம்பிக்கிறாங்க. இந்த கூட்டத்தில டீ குடிக்கவே காசு இல்லாத நீ எப்படி கட்சி ஆரம்பிப்ப. அப்படியே ஆரம்பிச்சாலும் அதை எப்படி தொடர்ந்து நடத்துவ. கூட்டத்துக்கு ஆளு சேர்க்கவும், அவங்களுக்கு பிரியாணி வாங்கித் தரவுமே சொத்தை வித்து தான் செலவு பண்ணணும்டி. புரிஞ்சுதா?

ராதா பாட்டி: அக்கா.... அப்ப எனது கனவு பலிக்கவே பலிக்காதா அக்கா?

சீதா பாட்டி: வாய்ப்பே இல்லைடி... முடியவே முடியாதுடி. ஒருவேளை கும்பானிக்கோ, குதானிக்கோ பினாமியா இருந்தாலாவது அரசியல் வானில் மின்னலாம். அதுக்கும் உனக்கு தகுதி இல்லையே

ராதா பாட்டி: கும்பானிக்கோ, குதானிக்கோ பினாமியா இருந்தா அரசியலில் எப்படிக்கா ஜொலிக்க முடியும்?

சீதா பாட்டி: அட நீ வேறடி.... அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாதவளா இருக்க. அவங்க தான்டி அரசியலையே ஆட்டிப் படைக்கிறவங்க. அது போக தங்களுக்கு ஏத்த பினாமிகளை வைத்தும் கட்சி தொடங்குவாங்க. அவங்க மூலம் பல வகைகளில் காயை நகர்த்துவாங்க. அப்படி கட்சி தொடங்குற பினாமிங்க ஆட்சியை பிடிக்கிறாங்களோ இல்லையோ சந்தோஷமா அரசியல் நடத்துவாங்க.

ராதா பாட்டி: அப்படியா.... அது எப்படிக்கா?

சீதா பாட்டி: அது அப்படித் தாண்டி.... கும்பானி அல்லது குதானியோட பினாமியா இருந்து கட்சி தொடங்குனா... 7 நட்சத்திர ஓட்டலில் கட்சி நிகழ்ச்சிய நடத்தலாம். தமிழகத்தில உள்ள எல்லா பத்திரிகைகாரங்களும் உன்ன சுத்தி இருப்பாங்க. அவங்களோட ஆலோசனை கூட்டம் நடத்துவதற்காக தனி விமானத்துல மும்பை, கோவா, அந்தமான்னு அடிக்கடி பறப்ப. அதுக்குல்லாம் காசு எங்கிருந்து வரும்னு கேட்காதே... எங்கிருந்தோ வரும். எப்படியோ வரும். அப்புறம் நீ இந்த சீதாவ திரும்பிக் கூட பார்க்க மாட்டாய். ஒரு புது உலகத்துல சஞ்சரிக்கத் தொடங்கி விடுவாய்

ராதா பாட்டி: அப்படியா அக்கா.... கேட்கவே சொகமா இருக்கே அக்கா.

சீதா பாட்டி: அது மட்டுமில்லைடி.... நீ ஹவாலா பார்ட்டியா இருந்தாலும் ஜாலி தான். கப்பலில் அடிக்கடி காசை இறக்கி வாரி இறைக்கலாம். யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம். மன்னர்களை புலவர்கள் புகழ்ந்து பாடுவதைப் போல, உன்னை பத்திரிகை காரங்களும், டி.வி காரங்களும் தினமும் உங்களை புகழ்ந்து பாடுவாங்க. தினமும் உன்ன சிறப்புப் பேட்டி எடுப்பாங்க. உனக்கு வலிக்காம கேள்வி கேட்பாங்க. சொர்க்கத்துல மிதக்குறது மாறி ஒரு ஃபீலிங் உனக்கு கிடைக்கும்.

ராதா பாட்டி: அய்யோ கேட்கவே இவ்வளவு சந்தோஷமா இருக்கே. ஆனால், இதை எல்லாம் அனுபவிக்க நான் கும்பானி அல்லது குதானியோட பினாமி இல்லையே... ஹவலா பார்ட்டியும் இல்லையே. அதனால இது எதுவும் எனக்கு இல்லை.... எனக்கு இல்லை.... எனக்கு இல்லை.... எனக்கு கிடைக்காது... கிடைக்காது.... கிடைக்காது.

சீதா பாட்டி: அடிப்பாவி.... நீ நல்லா தானேடி இருந்தாய். கட்சி ஆரம்பிக்கணும்னு கனவு கண்டதுக்கே இப்படி ஆயிட்டியே. விதி யாரை விட்டது? என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.