ஆகஸ்டு 4 ஆம் தேதி நண்பர்கள் தினத்தில் தனது பழைய நண்பன் தீரனை மீண்டும் தன்னோடு சேர்த்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். பாமகவின் மாநிலத் தலைவராக இருந்து அக்கட்சியின் துடிப்பான அத்தியாயங்களுக்குத் தூண்டுகோலாக இருந்தது பேராசிரியர் தீரன் தான், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாமகவில் இணைந்துள்ளார். 

ராமதாஸின் பிறந்தநாளன்று அவருக்கு நடந்த முத்துவிழாவில் தனது பழைய நண்பர்களோடும், தனது பழைய படைத் தளபதிகளோடும் கொண்டாடவே விரும்பினார். முதலில் அழைப்பு விடுக்கப்பட்டது பேராசிரியர் தீரனுக்கு, அடுத்ததாக  தனது மூத்தமகனாக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் மகனுக்கு, அடுத்ததாக அழைக்கப்பட இருந்தது வேல்முருகன், ஆனால் அது அன்புமணி, தலைவர் மணி உள்ளிட்டவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாததால் அழைக்கப்படவில்லை. 

பாமகவை ராமதாஸ் தொடங்கிய போது அதற்கு பக்கபலமாக இருந்தவர் பேராசிரியர் தீரன், ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தீரன் ராமதாசுடன் ஏற்பட்ட சில மனக்கசப்பால் தனிக் கட்சி தொடங்கினார். ஆனால் அவரால் நிலைத்திருக்க முடியவில்லை, அதன் பின் பல கட்சிகளில் இருந்த அவர் எப்படியாவது கழித்து விட நினைத்தவருக்கு ஜெயலலிதா மறைவுக்குப் பின் அங்கேயும் மரியாதை இல்லாததால், சரியாக ராமதாஸின் முத்து விழாவும் வர, அவரது அழைப்பும் வர பழையதெல்லாம் மறந்து ராமதாஸ் தனது பழைய நண்பனை கட்டி அனைத்து வரவேற்றார். 

அதேபோல, அதில் ராமதாஸை கடுமையாக எதிர்த்து வந்த குருவின் மகன் கனலரசன் ராமதாஸ் விழாவில் கலந்துகொண்டது பாமகவினர் மத்தியிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. விழாவிற்கு வந்த தனது தாயுடன் வந்த அவர் ராமதாஸின் காலில் விழுந்து ஆசி பெறுவது போன்ற போட்டோவும், அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்ட சில முக்கிய தலைவர்களுடன் சிரித்தபடி போஸ் கொடுப்பது போன்ற போட்டோவும் பாமகவினரால் வெகுவாக ரசிக்கப்பட்டது.

தீரன், காடுவெட்டி குரு, வேல்முருகன் போன்ற படைத் தளபதிகள் இருந்த காலத்தில் பாமக வன்னியர் கட்சியாக இருந்தது. அதன் பின் குருவை தவிர பல முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து வெளியேறினார்.  பின் பாமகவின் வன்னிய கட்சி என்ற பிம்பத்தை மாற்ற அனைத்து சமுதாயத்துக்கும் உரிய கட்சி என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார். ஆனால் செல்ஃப் எடுக்கவில்லை. கடந்த 2016 சட்டசபை தேர்தலிலும் ஏற்கப்படவில்லை.

இப்படி வன்னிய மக்களின் ஆதரவையும் இழந்து மற்ற சமுதாயத்தினரின் மத்தியில் ஜாதி சாயத்தால் வாக்குகளை இழந்த ராமதாஸ் மீண்டும் பழைய ஸ்டைலில் இறங்கியுள்ளாராம்.  அதற்காக பழைய பாமக தலைகளை  மீண்டும் தன்னோடு சேர்த்து வருகிறார். அந்த வரிசையில் முதல் ஆளாக தனது பழைய நண்பன் தீரன் வந்து விழுந்துள்ளார். அதேபோல ராமதாஸை கடுமையாக எதிர்த்து வந்த குருவின் மகன் வலையில் வந்து விழுந்துள்ளார். அல்டிமேட்டாக லிஸ்டில் வந்து விழப்போவது வேலு மன்னிக்கணும் வேல்முருகன் தான் வரப்போவதாக தகவல்கள் வெளியாகின்றன. மேலும் பழைய முக்கிய புள்ளிகளையும் நண்பன் தீரன் மூலம் இழுக்க காய் நகர்த்தி வருகிறாராம் ராமதாஸ்.