Asianet News TamilAsianet News Tamil

1987 என்னென்ன செஞ்சேன் தெரியுமா? போலீசுக்கு டிமிக்கி கொடுத்த த்ரில்லிங் சம்பவத்தை லீக் செய்யும் ராமதாஸ்...

நடந்து முடிந்த தேர்தலில் பாமக நின்ற ஏழு தொகுதிகளையும் பறிகொடுத்ததால் மிகுந்த மனவுளைச்சலில் இருக்கிறார் ராமதாஸ். அதுவும் வன்னியர்கள் வலுவாக உள்ள வடமாவட்டத்தில் மரண அடி கொடுத்ததை அவர் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்.
 

Ramadoss Leaked flashback on 1987
Author
Chennai, First Published Jun 22, 2019, 4:50 PM IST

நடந்து முடிந்த தேர்தலில் பாமக நின்ற ஏழு தொகுதிகளையும் பறிகொடுத்ததால் மிகுந்த மனவுளைச்சலில் இருக்கிறார் ராமதாஸ். அதுவும் வன்னியர்கள் வலுவாக உள்ள வடமாவட்டத்தில் மரண அடி கொடுத்ததை அவர் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்.

இந்த தோல்வியால் துவண்டிருக்கும் கட்சி நிர்வாகிகளை உசுப்பேத்தும் விதமாக கடந்த சில நாட்களாக ‘சங்க’ கால நினைவுகள், திமுகவுக்கு செய்த உதவி, குருவைப்பற்றி குமுதம் வார இதழில் சொன்னது என பழைய நினைவுகளை அசைபோட்டு வருகிறார்.

இன்று தொடர் மறியல் போராட்டத்தை தடுக்க சதி: கைது செய்யத் துடித்த காவல்துறையும், மாறுவேடத்தில் வலம் வந்த நாட்களும்! என்ற தலைப்பிட்டு போட்டுள்ள பதிவில்;  தமிழ்நாட்டின் வரலாற்றை வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு நடத்தப்பட்ட தொடர் சாலைமறியல் போராட்டத்தைக் குறிப்பிடாமல் எழுத முடியாது. இந்தப் போராட்டத்தை முன்னின்று, தலைமையேற்று நடத்தியது நான் தான்.

இந்தப் போராட்டத்தை நடத்தவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்று காவல்துறையினரும், அரசும் துடித்தது. என்னை கைது செய்தால் போராட்டத்தை தடுத்து நிறுத்தி விடலாம் என அரசும், காவல்துறையும் நினைத்தது. அதற்காக என்னைக் கைது செய்து விட வேண்டும் என்று துடித்தனர். இதற்காக திண்டிவனம் நகரில் உள்ள எனது இல்லம் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளின் வீடுகளில் தீவிர தேடுதல் வேட்டையை காவல்துறை நடத்தியது. இதை முன்கூட்டியே கணித்த நான் புதுச்சேரிக்கு சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் வேறு பெயரில் தங்கியிருந்தேன்.

ஒருகட்டத்தில் நான் தங்கியிருந்த இடத்தை காவல்துறை கண்டுபிடித்து சோதனை நடத்தியது. ஆனால், நான் இஸ்லாமியர்கள் அணியும் குல்லா ஒன்றை அணிந்து கொண்டு அங்கிருந்து தப்பி விட்டேன். அங்கிருந்து திண்டிவனம் சென்றால் கைது செய்து விடுவார்கள் என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நல்லவன்பாளையம் என்ற கிராமத்திற்கு சென்று தங்கினேன்.

தொடர்சாலைமறியல் போராட்டம் தொடங்குவதற்கு முதல் நாள் இரவு அந்த ஊரில் உள்ள ஏரிக்கரையில் பாபு கவுண்டர் என்பவருடன் உறங்கினேன். அதிகாலையில் எழுந்து அங்குள்ள ஏரியில் குளித்து விட்டு, திண்டிவனத்திற்கு வந்து தொடர்சாலைமறியல் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினேன். என்னை கைது செய்ய காவல்துறையினர் பல நாட்கள் தேடினாலும், அவர்களிடம் சிக்காமல் பல இடங்களுக்கு அலைந்து திருந்து தலைமறைவாக இருந்து போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினேன். அதன்பின்னர் காவல்துறையினர் என்னை கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தனர் இவாறு அதில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios