அந்த புள்ளை அனிதாவை கொன்றதே அறிவாலய ஆசாமிகள் தான், நீட் விவகாரத்தில் அறிவாலயத்து ஆட்களின் கோரப்பசி இன்னும் அடங்கவில்லை என திமுகவை கடுமையாக விமர்சித்து தள்ளியுள்ளார் ராமதாஸ்.

சீதா பாட்டி, ராதாப்பாட்டி "நீட் காளியும் - வாங்கிய பலியும்’’ என்ற தலைப்பில் உரையாடல் வடிவில் ஒரு கதை சொல்லியுள்ள ராமதாஸ் திமுக மற்றும் நீட் தேர்வு குறித்து பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த உரையாடல்... சீதா பாட்டி: என்னடி ராதா.... எப்போதும் பரவசம் தெரியும் உனது முகத்தில் இப்போது ஒருவிதமான கலவரம் தெரியுது?

ராதா பாட்டி: கிண்டல் பண்ணாதே அக்கா.... நானே பயந்து போய் கிடக்குறேன்.

சீதா பாட்டி: அடியேய்.... அதை தெரிந்து கொண்டு தானே கேட்கிறேன். என்ன நடந்துச்சி சொல்லு. எதாவது தீர்வு இருக்குதான்னு பார்ப்போம்.

ராதா பாட்டி: இல்ல அக்கா. இன்னிக்கு நான் நம்ம பச்சைக் காளி கோயிலுக்கு போயிருந்தேன். திடீர்ன்னு பார்த்தால் அங்க இருந்த ஒரு அம்மா மேல ஆத்தா வந்து சாமியாட ஆரம்பிச்சிட்டாங்க.

சீதா பாட்டி: இது சகஜம் தானே... ஆத்தா வர்றதும், குறி சொல்றதும் காலம் காலமா நடக்குறது தானே. இதில பயப்படுறதுக்கு என்ன இருக்கு?

ராதா பாட்டி: அக்கா.... சாமியாடின அம்மா சொன்ன தகவல்கள் தான் அதிர்ச்சி ரகம். அது தான் என் பயத்துக்குக் காரணம்.

சீதா பாட்டி: அப்படி என்னதான்டி ஆத்தா குறி சொன்னாங்க

ராதா பாட்டி: நான் தான் நீட் காளி வந்துருக்கேன். இந்த வருஷம் 5 பலி தான் எனக்கு கிடைச்சிருக்கு. இது போதாது. இன்னும் வேணும்னு ஆத்தா கேட்டுச்சிக்கா.

சீதா பாட்டி: அம்மா ராதா.... இது கொஞ்சம் சிக்கலான விஷயம்டி. நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே. எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் பகுத்தறிவுவாதி. ஆனாலும் சொல்றேன்.... சாமியே இருந்தாலும் எந்த சாமியும் மனிதர்களை பலி கேட்காது. அனேகமா இது ஆசாமியின் வேலையாகத் தான் இருக்க வேண்டும். ஒருவேளை இது அறிவாலய ஆசாமியின் வேலையாகக் கூட இருக்கலாம்.

ராதா பாட்டி: என்னக்கா சொல்றே?

சீதா பாட்டி: ஆமான்டி... நீட்டுக்கும் சாமிக்கும் என்னடி சம்பந்தம். சாமி ஏன் நீட்டை வைத்து பலி வாங்கப் போகிறது. அறிவாலயத்தில் உள்ள ஆசாமிகள் தான் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் அங்கம் வகித்த போது நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். தங்களுக்கு ஏதாவதுன்னா ஆதரவை வாபஸ் பெறப்போவதாக மிரட்டும் அவர்கள், தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நீட் திணிக்கப்பட்ட போது மட்டும் அதற்கு எதிராக கொந்தளிக்கவில்லை; ஆதரவை வாபஸ் பெறவில்லை.

ராதா பாட்டி: அப்படியா அக்கா... இவ்வளவு தீமைகளுக்கும் அறிவாலய ஆசாமிகள் தான் காரணமா அக்கா?

சீதா பாட்டி: அது மட்டுமில்லை ராதா. திமுக & காங்கிரஸ் கூட்டணி கொண்டு வந்த நீட் தேர்வு செல்லாது என்று 2013&ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக அப்போதைய சுகாதார மந்திரி குலாம் நபி ஆசாத் அறிவிச்சார். அதை எதிர்த்து தமிழகத்தில் முதலில் குரல் கொடுத்தது பா.ம.க. நிறுவனர் ராமதாசு தான். அப்புறம் அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த முடிவுக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதினாங்க. ஆனால், அதை ஏத்துக்காத மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதை திமுக கடைசி வரைக்கும் தட்டிக் கேட்கலை. அந்த வழக்கில் தான் ஏற்கனவே கொடுத்த தீர்ப்பு செல்லாது.... நீட் தேர்வை நடத்தலாம்; அதுவும் உடனே நடத்தணும்னு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராதா பாட்டி: அய்யோ.... இவ்வளவு விஷயம் இருக்கா அக்கா?

சீதா பாட்டி: அட... இன்னும் இருக்குடி. நீட் தேர்வுக்கு உலகம் அறிந்த முதல் பலி யாரு தெரியுமா?

ராதா பாட்டி: தெரியும்க்கா. அந்த அரியலூர் மாணவி அனிதா தானே.

சீதா பாட்டி: ஆமாண்டி. அந்த புள்ளை 12-ஆம் வகுப்பு தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண் எடுத்திருந்தாள். நீட் தேர்வு இல்லாவிட்டால் அந்த மாணவிக்கு தகுதி அடிப்படையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அவருக்கு மருத்துவ இடம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. இதை அந்த மாணவியும் நன்றாக உணர்ந்திருந்தாள். அதனால் கால்நடை மருத்துவப் படிப்பில் சேரத் தயாராக இருந்தார். ஆனால், அந்த மாணவியை குழப்பி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் நீட் தேர்வு ரத்தாகிவிடும் என்று திமுக நிர்வாகிகள் தான் அறிவாலயத்தில் வைத்து மூளைச்சலவை செஞ்சாங்க. அதை நம்பி அந்த மாணவியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர ஒப்புக் கொண்டது. அந்த மாணவியை அறிவாலயத்து ஆட்கள் தான் தில்லிக்கு அழைத்து சென்று வழக்கு நடத்தினார்கள். இதையெல்லாம் பார்த்த அந்த மாணவிக்கு நாமும் மருத்துவராகி விடுவோம் என்ற பொய்யான நம்பிக்கை பிறந்தது. ஆனால், அந்த மாணவியின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த மாணவி அனிதா தமது உயிரை மாய்த்துக் கொண்டாள். இப்படியாக பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் வேலையை அறிவாலயத்து ஆசாமிகள் தான் சிறப்பாக செய்வார்கள்.

ராதா பாட்டி: அய்யோ... கண்ணை கட்டுதே அக்கா!

சீதா பாட்டி: நீட் விவகாரத்தில் அறிவாலயத்து ஆட்களின் கோரப்பசி இன்னும் அடங்கவில்லை. நீட்டை அவர்கள் தான் கொண்டு வந்தார்கள். மாணவச் செல்வங்களின் மறைவுக்கும் அவர்கள் தான் காரணமாக இருந்தார்கள். இதையெல்லாம் மறைத்து விட்டு, அடுத்த தேர்தலில் வாக்கு வாங்க நீட் தேர்வால் இன்னும் பலர் பலியாக வேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டு இருப்பார்கள். ஆசாமிகளின் அந்த எண்ணம் தான் சாமியின் வார்த்தையாக வந்திருக்கும் கவலைப்படாதே ராதா.

ராதா பாட்டி: அக்கா.... நீ என் கண்ணை திறந்துட்டே, நன்றி அக்கா!

சீதா பாட்டி: நீ மட்டும் கண்ணை திறந்தா பத்தாது... மத்தவங்களும் கண்ணை திறந்தால் தான் நாடு நல்லாயிருக்கும் என இந்த உரையாடல் மூலம் திமுக தான் அனிதாவின் மரணத்திற்கு காரணம் என்றும், மேலும் நீட் தேர்வு வைத்தே அரசியல் செய்வதாகவும் வெளுத்து வாங்கியுள்ளார்.