இதை விட மனிதகுலத்திற்கு மிக மோசமான எதிரி இருக்க முடியாது... மோடி ஊருக்கு போனதற்கு பின் ராமதாஸ் ஆவேசம்
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை சட்டத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். அத்துடன் குடிநீர் புட்டிகள், எண்ணெய் - பால் உறைகள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டில் உள்ள பிற பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
சீன அதிபருடன் பேச்சு நடத்துவதற்காக கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், விடுதியின் பின்புறத்தில் உள்ள கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகள் கிடந்ததைக் கண்டு அவற்றை அப்புறப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை நடைமுறைக்கு வந்து 10 மாதங்களாகியும் அவை ஒழிக்கப்படவில்லை என்பதை இது உறுதி செய்கிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிலும் பிளாஸ்டிக் பொருட்களை விட மனிதகுலத்திற்கு மிக மோசமான எதிரி இருக்க முடியாது. இதை உணர்ந்து தான் 20 ஆண்டுகளுக்கு மேலாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் 2002-ஆம் ஆண்டு பசுமைத்தாயகம் நாளான ஜூலை 25-ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் இருந்து திரட்டி வரப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை சென்னையில் ஓரிடத்தில் கொட்டி, பின்னர் பாதுகாப்பாக அகற்றும் போராட்டத்தை நடத்தினோம். அதே நாளிலும், அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து 2012-ஆம் ஆண்டு பசுமைத் தாயகம் நாளிலும் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டறிக்கைகளை சென்னை தியாகராயர் நகரில் கடை, கடையாகச் சென்று வழங்கினேன். 2005-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதன்தொடர்ச்சியாகவே 2018-ஆம் ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் நாளான ஜூன் 5-ஆம் தேதி தமிழகத்தில் பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கும் அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டப் பேரவையில் வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை நடப்பாண்டின் தொடக்கத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்பின்னர் 10 மாதங்களான பிறகும் பிளாஸ்டிக் தடை முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதற்கு, கோவளம் கடற்கரையில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களும், குடிநீர் புட்டி போன்ற பிளாஸ்டிக் பொருட்களும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதே சாட்சியாகும்.
பிரதமர் தூய்மைப்பணி மேற்கொண்ட இடத்தில் மட்டும் தான் என்றில்லாமல் தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக எளிதில் மக்கக்கூடிய பயோ பைகள், காகிதப் பைகள், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பைகள் போன்றவை பயன்பாட்டுக்கு வந்துள்ள போதிலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக புழங்குவதை பார்க்க முடிகிறது. சாலைகளில் பயணம் செய்யும் போது சுங்கச்சாவடிகளுக்கு அருகிலும், கோயில்களிலும் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பைகள் குன்றுகளைப் போல குவிந்து கிடப்பது சாதாரணமான காட்சிகளாகி விட்டன.
பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்த போது அதை செயல்படுத்துவதில் காட்டப்பட்ட ஆர்வமும், தீவிரமும் காலப்போக்கில் குறைந்து விட்டது தான் இதற்குக் காரணம் ஆகும். பிளாஸ்டிக் தடையை செயல்படுத்துவதற்காக 1986-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் சட்டத்திலும், 1994-ஆம் ஆண்டு உள்ளாட்சிகள் சட்டத்திலும் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு குறைந்தபட்சம் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். ஆனால், இந்த சட்டம் முழுமையாக பயன்படுத்தப்படாததால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கட்டுப்பாடுகள் இல்லாமல் அதிகரித்து விட்டது.
அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் பைகள், உறிஞ்சிகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. குடிநீர் புட்டிகள், எண்ணெய் மற்றும் பால் உறைகள் உள்ளிட்டவை தடை செய்யப்படவில்லை. இவற்றில் பெரும்பாலானவற்றை மறுசுழற்சி செய்ய முடியும் என்றாலும், மிகக்குறைந்த அளவிலேயே மறுசுழற்சி செய்யப்படுகின்றன; கிட்டத்தட்ட 90% பிளாஸ்டிக் பொருட்கள் குப்பைகளிலும், கடலிலும் தான் கொட்டப் படுகின்றன. இன்றைய நிலையில் கடல்களில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் எடை ஐந்தரை லட்சம் டன் ஆகும். கடலில் இறந்த திமிங்கிலங்களின் உடல்களில் குவிண்டால் கணக்கிலும், தரையில் இறந்த மாடுகளின் உடல்களில் கிலோ கணக்கிலும் பிளாஸ்டிக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மற்றொருபுறம் பிளாஸ்டிக் கலந்த குப்பைகளை எரிக்கும் போது வெளிப்படும் நச்சு வாயுக்கள் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.
நீரிலும், நிலத்திலும் நிறைந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை மீன்களும், கால்நடைகளும் உட்கொள்வதால், நமது உணவில் மீன்கள் மற்றும் இறைச்சியை சேர்த்துக் கொள்ளும் நாமும் அவற்றின் வழியாக பிளாஸ்டிக் எனும் நஞ்சை உட்கொள்கிறோம். பிளாஸ்டிக் பொருட்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நூறு பொருட்களுடன் நூற்றி ஒன்றாவது பொருள் என்ற அலட்சியமான எண்ணம் மக்களின் மனதிலிருந்து அகற்றப்பட வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உணரச் செய்ய வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத உலகம் தான் உன்னத உலகம் என்பதை உணர வேண்டும்.
அத்தகைய உலகத்தை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை சட்டத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். அத்துடன் குடிநீர் புட்டிகள், எண்ணெய் - பால் உறைகள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டில் உள்ள பிற பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.