Asianet News TamilAsianet News Tamil

மொத்த நச்சுக்கழிவும் காவிரியில் தான் கலக்குது!! சுத்தப்படுத்த நடவடிக்கை எடுங்க.. ராமதாஸ் வலியுறுத்தல்..!

ramadoss emphasis to clean and maintain kaveri river
ramadoss emphasis to clean and maintain kaveri river
Author
First Published Dec 23, 2017, 1:13 PM IST


தமிழக மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் காவிரியை நச்சு கழிவிலிருந்து மத்திய, மாநில அரசுகள் காப்பாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி புனித நதி என்ற நம்பிக்கை சிதையும் வகையில் தென்னிந்திய நதிகளில் காவிரியில்தான் மிக அதிக அளவில் நச்சுக்கழிவுகள் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. காவிரியில் கலக்கும் மாசுக்கள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், மாசு கலப்பதை தடுக்க தமிழக ஆட்சியாளர்கள் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) உதவியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை நடத்திய ஆய்வுகளில்தான் இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்துள்ளன. காவிரி ஆற்றிலிருந்து ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு ஓர் ஆண்டுக்கு 76.9 டன் வீதம் நச்சு மற்றும் ராசயனப் பொருட்கள் வங்கக்கடலில் கலப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. தென்னிந்தியாவின் பெரிய நதிகளான கிருஷ்ணா, கோதாவரி ஆகிய ஆறுகளில் இந்த அளவு முறையே 37,67.2 டன்னாக உள்ளன.

அதுமட்டுமின்றி, காவிரிக் கரைப்பகுதிகளில் நிலத்தடி நீரும் மிக மோசமாக மாசுபட்டுள்ளது. கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கிடைக்கும் நிலத்தடி நீர் குடிக்க முடியாததாக மாறியிருக்கிறது. சில இடங்களில் நிலத்தடி நீர் விவசாயத்திற்குக் கூட லாயக்கற்றதாக மாறிவிட்டதாக தெரியவந்துள்ளது.

காவிரி ஆறு மாசுபடுவதற்கு முக்கியக் காரணம் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் அதில் கலக்கவிடப்படுவதுதான். சாயப்பட்டறைக் கழிவுகள், வேளாண்மைக் கழிவுகள் போன்றவை நொய்யல், அமராவதி, பவானி ஆகிய ஆறுகளில் கலக்கின்றன. அந்த ஆறுகள் கலப்பதால் தான் காவிரி நீர் வரலாறு காணாத வகையில் மாசுபட்டிருக்கிறது. கால்சியம், பொட்டாசியம், சல்பேட், சோடியம், மக்னீசியம், பைகார்பனேட் ஆகிய வேதிப்பொருட்கள் காவிரி நீரில் அதிக அளவில் கலந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கங்கையில் கலக்கும் மாசுகளை விட 600 மடங்கு அதிகமாக காவிரியில் மாசுக்கள் கலக்கின்றன. இதனால் காவிரியால் ஏற்படும் நன்மைகளை விட பாதிப்புகள் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. காவிரியில் மாசு கலப்பது குறித்தும், அதை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பாமக தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறது. மேட்டூர் பகுதியில் கெம்பிளாஸ்ட் கழிவுகள் கலப்பதால் கார்சினோஜென் எனப்படும் வேதிப்பொருள் உண்டாகிறது.

இதனால் காவிரி ஆற்றில் குளிப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நொய்யல் ஆற்றுக் கழிவுகள் கலப்பதால் காவிரி ஆற்றில் டையாக்சின் என்ற இரசாயனப் பொருட்கள் உருவாகின்றன. டையாக்சின்களால், உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும்.

மேலும் இது உயிரணுக்களையும் பாதிக்கும் என்பதால் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மையும் அதிகரிக்கும். பக்தர்கள் புனித நீராடும் கும்பகோணம் பகுதியில் காவிரியில் 52 வகையான நச்சுப் பொருட்கள் கலந்துள்ளன. இதனால் காவிரியில் நீராடினால் நோய் தீரும் என்ற நிலை மாறி நோய் சேரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 44,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விவசாயம் செய்வதற்கான ஆதாரமாக காவிரி திகழ்கிறது. சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் வாழும் மக்கள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 5 கோடி மக்களின் குடிநீர் தேவையை காவிரிதான் நிறைவேற்றுகிறது.

இத்தகைய நிலையில், காவிரி நீர் மாசுபடுவது 5 கோடி மக்களின் உடல்நிலையிலும், விவசாயத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் காவிரி நீரை தூய்மைப்படுத்த புதிய திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும் என பாமக வலியுறுத்தி வருகிறது.

ஆனால், கர்நாடகத்தில் காவிரியில் கழிவுகள் கலந்து விடப்படுவதை தடுக்கவோ, உள்ளூரில் சாயக்கழிவு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. நொய்யலாற்றில் சாயக் கழிவுகள் கலப்பதால் ஆற்றில் நுரை பெருக்கெடுத்து ஓடுவதைத் தடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் போதெல்லாம், நொய்யலாற்றில் சாயக்கழிவுகள் கலக்கவில்லை; மாறாக மக்கள் சோப்பு போட்டு குளிப்பதாலும், துணி துவைப்பதாலும் தான் நுரைப் பெருக்கெடுத்து ஓடுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் விஞ்ஞான முறையில் விளக்கம் அளிக்கிறார்.

இவர்களை வைத்துக் கொண்டு காவிரி உள்ளிட்ட நதிகளை எவ்வாறு பராமரிக்கப் போகிறோம் என்பதை நினைக்கும் போதே தமிழக நீர்நிலைகளின் எதிர்காலம் குறித்து பெரும் அச்சமும் கவலையும் ஏற்படுகிறது. கங்கை ஆறு மாசுபட்டுள்ள நிலையில், அதை சீரமைக்க ரூ.20,000 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதை விட 600 மடங்கு அதிக மாசு கலக்கும் காவிரியை தூய்மைப்படுத்த எந்தத் திட்டமும் வகுக்கப்படாதது வேதனையளிக்கிறது.

தமிழக மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் காவிரியை காப்பாற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும். எனவே, காவிரியைத் தூய்மைப்படுத்துவதற்காக தனித் திட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios