ramadoss emphasis people to harvest rain water

சென்னையில் பெய்யும் மழைநீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்காது என்பது உறுதியாகிவிட்ட நிலையில், மக்களாவது சொந்த முயற்சியில் மழைநீரை சேமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கடந்த மூன்று நாட்களில் 200 மி.மீ.,க்கும் கூடுதலாக மழை பெய்திருக்கிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இந்த அளவு மழை பெய்திருந்தால் நிலத்தடி நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கும். 

ஆனால், சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் கிணறுகள் வழியாக பார்த்து உணரக்கூடிய அளவுக்கோ, அளவிடும் அளவுக்கோ உயரவில்லை. மழை நீரை நிலத்தடியில் சேமித்து வைக்க முடியாமல் வீணடிப்பதில் அரசுக்கு எவ்வளவு பங்குண்டோ, அதே அளவு பங்கு பொதுமக்களாகிய நமக்கும் உண்டு. 

மழை நீரை சேமித்து வைப்பதில் நம்மில் பலர் ஆர்வமும், அக்கறையும் காட்டாதது தான் இதற்கு காரணமாகும். ஒரு சில தனி வீடுகளைத் தவிர சென்னையில் வேறு எங்கும் மழைநீர் சேமிப்பு என்பது நடைமுறையில் இல்லை என்பது தான் வேதனையான உண்மையாகும். 

மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டிய ஆட்சியாளர்கள் தங்களின் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே நேரம் போதுமானதாக இருப்பதால் பயனுள்ள அத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. 

தமிழகத்தின் தற்போதைய ஆட்சியாளர்கள் பயனுள்ள திட்டம் எதையும் செயல்படுத்தப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. 

தன் கையே தனக்குதவி என்ற அடிப்படையில், இந்த ஆட்சி ஒழியும் வரை, தமிழக மக்கள் தான் தங்களுக்கான திட்டங்களை தாங்களே வகுத்து செயல்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

எனவே சென்னைவாழ் மக்கள் மழைநீரை சேமிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.