ramadoss condemns illegal buildings in t nagar
அனைத்து விதிமீறல் கட்டடங்களையும் இடித்துவிட்டு, மீண்டும் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக்கடையில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அதிகாலை ஏற்பட்ட தீயை பல மணி நேரத்துக்கு மேலாகியும் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்தத் தீ விபத்தால் அந்தத் துணிக்கடையைச் சுற்றியுள்ள கட்டடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கட்டடத்தின் தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு மற்ற மாடிகளுக்கும் பரவியது. தரைத்தளத்தின் அருகில் தீயணைப்பு வாகனங்களால் செல்ல முடிந்திருந்தால் ஒரு மணி நேரத்திற்குள் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும்.
ஆனால், ஒருபுறம் மேம்பாலம், மறுபுறம் அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் ஆகியவற்றால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து விதிகளை மீறி கட்டடங்களை கட்டியதால்தான் விபத்துகளும், சேதங்களும் தடுக்க முடியாதவையாகிவிட்டன என தெரிவித்துள்ளார்.குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட 32 ஆயிரம் கட்டடங்களை இடிக்க வேண்டும் என்று 2006 -ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும், தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்வோர் இக்கட்டடங்களைப் பாதுகாத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, துணிக்கடை தீ விபத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, சென்னையில் உள்ள அனைத்து விதிமீறல் கட்டடங்களையும் இடித்துவிட்டு, மீண்டும் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது என்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் மாறாக, அவற்றை இடித்துவிட்டு, விதிகளுக்குட்பட்டு மீண்டும் கட்டுவதுதான் சரியானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
