Asianet News TamilAsianet News Tamil

எதற்க்கெடுத்தாலும் கையூட்டு... தலைவிரித்தாடும் ஊழல்! நீங்க பண்றத நெனச்சி வெட்கித்தலைகுனியணும்... எடப்பாடி அரசை எகிறி அடிக்கும் ராமதாஸ்...

Ramadoss condemns edappadi palanisami govt
Ramadoss condemns edappadi palanisami govt
Author
First Published Jul 11, 2018, 12:21 PM IST


எதற்க்கெடுத்தாலும் கையூட்டு, தலைவிரித்தாடும் ஊழல்! நீங்க பண்றத நெனச்சி  வெட்கித்தலைகுனியணும்... எடப்பாடி அரசை  தாறுமாறாக கிழித்து தள்ளியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியாவில் தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 15-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தொழில் துறை முதலீடுகளை ஈர்த்து புதிய நிறுவனங்களை தொடங்கினால் மட்டுமே தமிழகம் முன்னேற முடியும் என்ற நிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க யாரும் தயாராக என்பதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. தமிழகத்தின் இந்த பின்னடைவு கவலை அளிக்கிறது.

மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை 2017-ஆம் ஆண்டிற்கான தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் வழக்கம் போலவே ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. ஆந்திரத்திலிருந்து பிரிந்த தெலுங்கானா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஹரியானா, சத்தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையே 3 முதல் 5 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளன. கர்நாடகம் எட்டாவது இடத்தையும், இராஜஸ்தான் 9-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலமான தமிழகத்தால் முதல் 10 இடங்களுக்குள் வர முடியவில்லை.

மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் போன்ற தொழில்துறையில் பின்தங்கிய மாநிலங்களுக்கு பின்னால் 15-ஆவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகம் 18-ஆவது இடத்தில் இருந்தது. இப்போது சில இடங்கள் முன்னேறியுள்ளது என்றாலும் கூட, இது போதுமானதல்ல. இதற்கு முன் 2015-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 12-ஆவது இடத்திலிருந்து தமிழ்நாடு, 2016-ஆம் ஆண்டு ஏற்பட்ட சரிவிலிருந்து இன்று வரை மீண்டு வர முடியவில்லை. இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாடு, தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலிலும் அதே இடத்தில் இருந்தால் மட்டுமே தொழில்துறை முன்னேற்றத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆனால், 2015-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் இப்பட்டியலில் இதுவரை முதல் 10 இடங்களை தமிழகம் பிடிக்க முடியாதது வெட்கித்தலைகுனிய வேண்டிய ஒன்றாகும்.

அதேநேரத்தில் ஆந்திராவும், தெலுங்கானாவும் இந்தப் பட்டியலில் முதல் இரு இடங்களை தொடந்து தக்கவைத்துக் கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு பரிந்துரைக்கும் யோசனைகளில் எத்தனை யோசனைகளை ஒவ்வொரு மாநிலமும் செயல்படுத்துகின்றன என்பதன் அடிப்படையில் தான் இந்த தரவரிசை தயாரிக்கப் படுகிறது. உண்மையான அக்கறையுடன் பரிந்துரைகளை செயல்படுத்தும் மாநிலங்கள் மிகவும் எளிதாக முதலிடத்தை பிடிக்க முடியும். ஆந்திரம் அப்படித்தான் முதலிடத்தைப் பிடித்து வருகிறது. தமிழகத்திற்கும் முதலிடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால், ஆந்திரம் 98.42% சீர்திருத்தங்களை செய்து முதலிடம் பிடித்துள்ள நிலையில், தமிழகம் 90.68% சீர்திருத்தங்களை மட்டுமே செய்ததால் தான் 15-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள சீர்திருத்தங்களை தமிழகத்தால் செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் தமிழக அரசு நிர்வாகத்தில் தலைவிரித்தாடும் ஊழல் என்பதைத் தவிர வேறல்ல.

தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் ஆந்திராவும், தெலுங்கானாவும் தான் தமிழககத்திற்கு கடுமையான போட்டியை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய ரூ.25,000 கோடி மதிப்புள்ள வாகன உற்பத்தித் துறை சார்ந்த முதலீடுகள் ஆந்திரத்துக்கு சென்றுள்ளன. கடந்த பல ஆண்டுகளாகவே இது தான் நிலை எனும் போது, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். ஆனால், தொழில் தொடங்க அனுமதிப்பதற்காக கையூட்டு வாங்குவதை பினாமி ஆட்சியாளர்கள் கைவிட மாட்டார்கள் என்பதால் தான், தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்கள் கூட ஆட்சியாளர்களுக்கு கையூட்டு கொடுக்கத் தயங்கி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு செல்கின்றனர். பினாமி ஆட்சியாளர்களின் ஊழல் ஓயாது என்பதால் தொழில் முதலீட்டை ஈர்ப்பது, தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் தமிழகத்தின் பின்னடைவும் தொடரும்.

தொழில்துறையில் தமிழகம் அடைந்து வரும் பின்னடைவு வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படாததால் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதுடன், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் குறைந்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் கடன் சுமை ஆண்டுக்கு 29.85% வீதம் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கடன்களை தமிழகம் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், அப்போது தமிழகம் கடுமையான கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளது. இச்சிக்கலை சரி செய்ய வேண்டிய ஆட்சியாளர்கள் கையூட்டை வாங்கிக் குவிப்பதில் மட்டுமே தீவிரம் காட்டுகின்றனர்.

தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியாத வரை தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியடையப் போவதில்லை. பினாமி ஆட்சி நீடிக்கும் வரை அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியப்போவதில்லை. எனினும், வெகுவிரைவில் பினாமி ஆட்சி அகற்றப்படும்; அதன்பின்னர் அமையும் ஆட்சியில் முதலீட்டை ஈர்க்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகும் என்பது மட்டும் உறுதி!

Follow Us:
Download App:
  • android
  • ios