Asianet News TamilAsianet News Tamil

இவர்கள் தான் தமிழகத்தின் சாபம்.. அடக்க முடியாத ஆதங்கம்!! அறிக்கையில் கொட்டி தீர்த்த ராமதாஸ்

ramadoss condemns and criticize tamilnadu rulers
ramadoss condemns and criticize tamilnadu rulers
Author
First Published Mar 29, 2018, 12:22 PM IST


காவிரிப் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்து தமிழகத்தை இழைத்த துரோகத்தை தமிழக மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க  உச்ச நீதிமன்றம் அளித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு புதிய மனு தாக்கல் செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கடைந்தெடுத்த மோசடி என்பதற்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கையை விட சிறந்த உதாரணம் வேறு எதுவுமில்லை.

ramadoss condemns and criticize tamilnadu rulers

காவிரிப் பிரச்சினை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில் காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அமைப்பை (திட்டம்) உருவாக்க அடுத்த ஆறு வாரங்களில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் பல இடங்களில் ஸ்கீம் என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஸ்கீம் என்பதே காவிரி மேலாண்மை வாரியம் தான் என்பதை நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் 216 முதல் 236 வரை நீளும் எட்டாவது அத்தியாயத்தை முழுமையாகப் படித்தால் உணர்ந்து கொள்ள முடியும். இதற்கெல்லாம் மேலாக பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த வழக்கில் தமிழகத்தின் கோரிக்கையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான்.

ramadoss condemns and criticize tamilnadu rulers

அவ்வாறு இருக்கும் போது உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? ஒருவேளை இதில் மத்திய அரசுக்கு ஏதேனும் ஐயம் இருந்தாலும் கூட தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருக்க முடியும். ஆனால், ஆறு வாரங்கள் அமைதியாக இருந்து விட்டு, இப்போது உச்ச நீதிமன்றத்தை அணுகுவது நம்பவைத்து கழுத்தை அறுக்கும் செயலாகத்தானே இருக்க முடியும்.

கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அங்கு அரசியல் லாபம் தேடும் நோக்குடன்தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய பாரதிய ஜனதா அரசு மறுக்கிறது. அதேநேரத்தில் இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இப்போது விளக்கம் கேட்கும் மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட வேண்டியது காவிரி மேலாண்மை வாரியமா? ஸ்கீமா? என்பது தொடர்பாக மத்திய அரசுக்கு எந்தக் குழப்பமும் இல்லை; இவ்விஷயத்தில் மத்திய அரசு கடைபிடிப்பது காலம் கடத்தும் அணுகுமுறை தான் என்பதற்கு ஆயிரம் உதாரணங்களைக் கூற முடியும்.

ramadoss condemns and criticize tamilnadu rulers

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விஷயத்தில் மத்திய அரசு முதன் முதலில் கருத்துக் கூறியது பிப்ரவரி 27-ஆம் தேதி தான். தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியிருந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் சிறப்பு நேர்காணலில் ஒரு இடத்தில் கூட ஸ்கீம் என்று குறிப்பிடவில்லை; காவிரி மேலாண்மை வாரியம் என்று தான் குறிப்பிட்டிருந்தார். அதன்பின் மார்ச் 9-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் கூட, ‘‘இந்தப் பிரச்சினைக்கு மற்ற 3 மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு முடிவெடுக்கப் படும். இதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை’’ என்று தான் மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் விளக்கமளித்திருந்தார். கடைசியாக நேற்று  முன்நாள் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்த அவர்,‘‘ காவிரி ஸ்கீம் என்பதும், காவிரி மேலாண்மை வாரியம் என்பதும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்று தான்’’ என்று  தெளிவாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், அடுத்த 2 நாட்களுக்குள் எல்லா தெளிவும் விலகி, குழப்பம் சூழ்ந்து விட்டதைப் போல உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கப் போவதாக மத்திய அரசு கூறுவதைப் பார்க்கும் போது, நல்ல நாடகம் நடக்குது என்பதை உணர்ந்து நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

ramadoss condemns and criticize tamilnadu rulers

காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசின் துரோகத்திற்கு சற்றும் குறையாதது மாநில அரசின் துரோகம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று பிப்ரவரி  16-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலேயே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருக்க மத்திய ஆட்சியாளர்கள் முயலக்கூடும் என்பதால், மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றுகிறது என்பதும்,  துரோகம் செய்கிறது என்பதும் நன்றாகத் தெரிந்தும் அதற்கு எதிராக வாயைத் திறப்பதற்குக்கூட   தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. மாறாக சொல்லிக் கொடுக்கப்பட்ட கிளிப்பிள்ளையைப் போல, ‘‘உச்சநீதிமன்றம் கொடுத்த அவகாசம் முடியும் வரை காத்திருப்போம்’’ என்பதையே மீண்டும், மீண்டும் கூறி வந்தனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி மத்திய அரசுக்கு அழுத்தம் தரலாம் என்ற யோசனை அவர்களின் காதுகளில் விழவில்லை. உச்சநீதிமன்றம் விதித்தக் கெடு இன்றுடன் முடிவடைந்து விட்ட நிலையில் நாளைக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து விட்டு அமைதியாக ஊழல் செய்வதைத் தவிர வேறு எதுவும்  செய்ய மாட்டார்கள். இவர்கள் தான் தமிழகத்தின் சாபம்.

ramadoss condemns and criticize tamilnadu rulers

காவிரிப் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு இழைத்த துரோகத்தை  தமிழக மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். எனவே, உச் சநீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்து மக்களை ஏமாற்றுவதை விடுத்து உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இன்று இரவுடன்  முடிவடைவதற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios